மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 25 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 25 - தமயந்தி

கெளரி. கர்நாடகாவின் பிரபல பத்திரிகையாளரான இவரின் படுகொலை இந்துத்துவாதத்தை எதிர்க்கும் பலருக்கான எச்சரிக்கையாக ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியால் பார்க்கப்படுகிறது. கெளரிக்கு எதிர்ப்புகள் வெளியிலிருந்து முதலில் வரவில்லை. அவரது அப்பா ஒரு பிரபல பத்திரிகையாளர். அவரின் மரணத்துக்குப் பிறகு, அவரது சகோதரரான இந்திரஜித் அவர் அப்பாவின் பத்திரிகையின் வெளியீட்டாளராகவும் கெளரி ஆசிரியரும் ஆனார்கள்.

ஆனால், போகப் போக இருவருக்கும் பல வேறுபாடுகள் ஏற்பட்டன. நக்சலைட்டுகள் பற்றி கெளரி ஒரு கட்டுரை எழுத அதை வெளியிட மறுத்த அவரது சகோதரர், ‘கெளரி நக்சலைட்டுகளுக்கு ஆதரவாளர்’ என்று குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்ல. காவல்நிலையத்தில் கெளரி அலுவலகத்திலிருந்து ஒரு கணினி, ஒரு பிரின்டர் மற்றும் ஸ்கேனரைத் திருடி விட்டதாக புகார் கொடுத்தார். பதிலுக்கு கெளரியும் அவரது சகோதரர் துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டியதாக புகார் கொடுத்தார். பின் தன் பத்திரிகையைத் தனியாக ஆரம்பித்தார் கௌரி.

இப்படித்தான் பல பெண்களுக்கு முதலில் தங்கள் வீட்டு ஆண்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அறிவுத்தளத்தில் இயங்கும் பெண்களுக்கு. இது பெரும் சவாலாகவே அமைகிறது. எழுதும் பெண்கள் மனசாட்சியை அடகு வைக்காமல் இதற்கான பதிலை சொல்வார்களானால் நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும். அடுத்ததாக அறிவுத்தளத்தில் இயங்கும் ஆண்களின் வன்மத்துக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் எனது ‘கொன்றோம் அரசியை’ என்னும் சிறுகதைத் தொகுப்பு குறித்து கடலூரில் நடைபெற்ற ஓர் இலக்கிய கூட்டத்தில் நான் ஏற்புரையாற்றினேன். அப்போது பேசுகையில், ‘சமூகம் என்னை துரத்தினபடி இருந்தது. ஒருகட்டத்தில் நான் திரும்பி பெருங்குரலெடுத்து கத்தாமல், வன்முறையான உடல்மொழி பிரயோகிக்காமல் திரும்பி நின்று சமூகத்தின் கண்களை உற்றுப் பார்த்தேன். அந்த கணம் நான் நானான தருணம்’ என்று பேசியபோது ஒரு விமர்சகர் “அதென்ன எப்ப பார்த்தாலும் வலிகள் அது இதுன்னு பேசிக்கிட்டு... பின்ன எங்க உங்களுக்கு கம்பீரம் இருக்கும்?” என்று எடக்குமடக்காக பேசியவரிடம் முதலில் நிதானமாக “என் வலிகள் வடுக்களாகி விட்டன. அதிலிருந்து தான் நான் உயிர்த்தெழுந்திருக்கிறேன்” என்று சொன்னேன். ஆனால், அவர் நிறுத்தினபாடில்லை. அவருடைய விதாண்டாவாதத்துக்கு என்னால் பதில் சொல்ல இயலாது என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன். கூட்டம் முடிந்தவுடன் அவர், “சாப்டீங்களா?” என்று கேட்க நான், ‘ஆமாம்’ என்று தலையசைத்து, “நீங்க பேசியது தவறு தோழர்” என்றேன். அவர் உடனே கோபமாக எழுந்து “உன் மூஞ்சப் பாரு... நீயென்ன பெரிய எழுத்தாளரா? உன் வயசென்ன என் வயசென்ன? போ... தூரப் போ” என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் அவரது உரையில் அனிதாவின் மரணம் பற்றி பேசியிருந்தார். “அனிதாவை நீட் அடுத்த வருடம் எழுதியிருக்கலாமேன்னு கேட்பது போலிருக்கு உங்க குரல்” என்றேன் . அந்த இடத்தில் இரு நபர்களைக் கடந்து வேறு யாரும் எனக்காக பேசவில்லை. அவர்களின் மவுனம் எனக்கு அவரின் வார்த்தைகளை விட வன்முறையாக தெரிந்தது. என் எழுத்தை ஏற்றுக்கொள்ளாமல் போக அவருக்கு சகல உரிமையும் உண்டு. ஆனால், என் வாழ்வு குறித்தும் நான் எதை சிந்திக்க வேண்டுமென்றும் சொல்ல அவருக்கு எள்ளளவும் அருகதை கிடையாது. என் கம்பீரம் என் மனது. என் கம்பீரம் என் எழுத்து.

இப்படி பல அறிவுஜீவி எழுத்தாளர்களின் எள்ளலைக் கடந்தே தான் நானும் எழுத்தாளராகப் பயணப்பட்டு நிற்கிறேன். என்றாலும் பெண்ணை சிறுமையாக பார்க்கும், சிறுமைப்படுத்த நினைக்கும், சிறுமையில் பெண்ணிருந்தால் அவளுக்காக இரக்கப்படும்... சிறுமையிலிருந்து மீண்டு வந்த பெண்ணை சகிக்க இயலாத மனநிலைதான் இங்கு பெரும்பாலான அறிவுஜீவி ஆண்களுக்கு இருக்கிறது. மிக சாதாரண ஆண்கள். ஆனால், பல நேரங்களில் பெண்களுக்கான மதிப்பை அளிக்கிறார்கள்.

கெளரி என்பவர் நமக்கு இச்சிக்கல்களின் குறியீடு. அரசியல் பேசும் பெண்ணை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மனித உயிரை மாற்று சிந்தனை உடையவர் என்பதால் கொலை செய்யும் கொடூரம் நம் இந்தியச் சமூகத்தில் பெருக ஆரம்பித்துவிட்டது. இது மெல்ல சமூகத்தில் தோன்றியதில்லை. இதற்கான சூழலை இந்துத்துவா கட்சிகள் பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல நிதானமாக ஏற்படுத்தியிருக்கின்றன. நீட் என்பது எப்படி விளிம்பு நிலை மனிதர்களை அறிவுலகத்திலிருந்து புறந்தள்ள கையில் எடுக்கப்பட்ட ஒரு கருவியே ஆகும்.

கெளரியின் மரணத்தில் அவரது முன்னாள் கணவர் அவரைப் பற்றி எழுதிய வரிகளை வாசித்து நெகிழ்ந்தேன். ஐந்தாண்டு திருமண வாழ்வுக்குப் பிறகு விவாகரத்தாகியும் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதை நிறுத்தவில்லை. நண்பர்களாய் இருந்திருக்கிறார்கள். அந்த மதிப்பிற்குரிய மனிதரின் மேல் பாய்ந்த தோட்டாக்கள் நம் இந்திய அரசியல் சமூகம் மீதே பாய்ந்திருக்கின்றன.

ஒரு நகை கடைக்காரரிடம் லஞ்சப்பணம் வாங்கியதாக பிஜேபிக்காரர்கள் இருவரைப் பற்றி எழுதிய கட்டுரைக்கான ஆதாரத்தை தந்தவர் பற்றி எத்தனை நெருக்கடியிலும் கெளரி வெளிப்படுத்தவே இல்லை. அது மட்டுமல்ல... பெருமாள் முருகன் மீதான வன்முறையின் போதும் அதே போல குழந்தைப் பேறுக்காக மாற்று நபருடன் உடலுறவு வைப்பதைப் பற்றி எழுதிய எஸ்.எல்.பைரப்பா என்பவர் பார்ப்பனராய் இருந்ததால்தான் அவர் மீது யாரும் புகார் வைக்கவில்லை என்று மிகத் தெளிவாக தாக்குதலில் இருக்கும் சாதி அரசியலை முன்வைத்தார் கெளரி.

அதேபோல், மிகத் தீவிரமாக பெண்களின் மீதான அடக்குமுறைகளுக்கு இந்து மதத்தின் கோட்பாடுகளே காரணமென்று தீர்மானமாக நம்பினார். எழுதினார். செயல்பட்டார்.

அவரைக் கொலை செய்யுங்கள். தோற்றுப் போவது நீங்கள் தான் இந்துத்துவாவாதிகளே..

இந்த வார மின்னஞ்சல் அப்படிப்பட்டதாகவே இருக்கிறது...

அன்பின் தமயந்தி

என் பெயர் கமலா. வயது 60. துபாயில் இருக்கிறேன். 30 வயதில் இங்கு வந்தோம். பணக்கஷ்டத்தால் இங்கு வந்த நாங்கள் இன்று மிக நல்ல நிலையில் உள்ளோம். ஆனால், முப்பது வருட தனிமை என்னைக் கொல்கிறது. இதை என் கணவர் புரிந்து கொள்ளவில்லை.

எங்களுக்கு குழந்தைகள் இல்லை. நேரமிருக்கும்போது சின்ன சமையல் குறிப்புகள் பத்திரிகைகளுக்கு எழுதுவேன். அதை அவர் அத்தனை வெறுப்பார் என்று நினைக்கவில்லை. அதையும் கை விட்டேன். உன் கட்டுரைகளை என் அலைபேசியில் வாசிக்கிறேன். மும்பையிலிருக்கும் என் தங்கை மகள் லிங்க் அனுப்பியிருந்தாள். மகிழ்ச்சியாய் இரு மகளே.. எழுதிக் கொண்டே...

அன்புடன்

கமலா

நிச்சயம் அம்மா... அதே சமயம் இவ்வுலகத்தில் யாரும் தனியாய் இல்லை. எந்நேரமும் நீங்கள் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். அன்பு.

----------------

இந்தத் தொடர் கெளரிக்குச் செலுத்தும் இந்த மரியாதையுடன் நிறைவுறுகிறது. சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மின்னம்பலத்தில் மற்றுமொரு தொடரில் விரைவில் சந்திப்போம்.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

வல்லமை தாராயோ - 17 - தமயந்தி

வல்லமை தாராயோ - 18 - தமயந்தி

வல்லமை தாராயோ - 19 - தமயந்தி

வல்லமை தாராயோ - 20 - தமயந்தி

வல்லமை தாராயோ - 21 - தமயந்தி

வல்லமை தாராயோ - 22 - தமயந்தி

வல்லமை தாராயோ - 23 - தமயந்தி

வல்லமை தாராயோ - 24 - தமயந்தி

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon