மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

கிரிக்கெட்: இந்தியாவில் வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய பயணம்!

கிரிக்கெட்: இந்தியாவில் வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய பயணம்!

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

முக்கியத் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதன்படி ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா - குர்கீரத் சிங் மான் தலைமையிலான இந்திய போர்ட் பிரெசிடென்ட் லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் (50 ஓவர்) சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. பெரும்பாலான முன்னணி வீரர்கள் துலீப் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் அனுபவமில்லாத வீரர்களே அதிக அளவில் இடம் பிடித்திருந்தனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், கார்ட் ரைட் களமிறங்கினர். ரைட் இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்மித் பொறுப்புடன் விளையாடினார். இவர்களது கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தபின், வார்னர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டியது. அதிகபட்சமாக ஸ்டோனிஸ் 76 ரன்களும், ஹெட் 65 ரன்களும், ஸ்மித் 55 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி. தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், 8 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களைக் கைபற்றினார்.

பிறகு 348 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய போர்ட் பிரெசிடென்ட் லெவன் அணியின் திரிபத்தி 7 ரன்களிலும், கோஸ்வாமி 43 ரன்களிலும், அகர்வால் 42 ரன்களிலும், கே.டி. படேல் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக ஆடிய கர்னிவர் 4 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 48.2 ஓவர்களில், 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரை வெற்றியுடன் தொடகியுள்ளது. இருப்பினும் வருகிற 17ஆம் தேதி முழு பலம் நிறைந்த இந்திய அணியை எதிர்கொள்வதனால், போட்டி இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon