மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஆன்லைன் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு!

ஆன்லைன் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு!

ஆன்லைன் மூலம் வேலைக்கு அமர்த்தும் விகிதாச்சாரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்த மான்ஸ்டர் வேலைவாய்ப்பு குறியீட்டில், “இணையதளங்களில் வேலைவாய்ப்பு மழை பொழிகிறது. வீட்டு உபயோகப் பொருள்கள், வங்கித்துறை, காப்பீட்டுத்துறை, நிதித்துறை, சிறு குறு நுகர்வோர் பொருள்கள் போன்ற துறைகளில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் எண்ணிக்கைக் குறியீடு இந்த ஆகஸ்ட் மாதத்தில் 279 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதன் மதிப்பு 244 புள்ளிகளாக இருந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இதன் மதிப்பு 274 புள்ளிகளாக இருந்தது” என்று தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட், பி.பி.ஓ, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் தயாரிப்பு ஆகிய துறைகளிலும் ஆன்லைன் மூலம் பணியமர்த்தல் அதிகரித்துள்ளது. சமூக - பொருளாதார நிலைகளில் இது ஒரு சிறந்த தொழில்நுட்பப் புரட்சியாக அமையும் என்று மான்ஸ்டர் இணையதளத்தைச் சேர்ந்த சஞ்சய் மோடி கூறுகிறார். இதில், வீட்டு உபயோகப் பொருள்கள் துறை வளர்ச்சி மட்டும் 54 சதவிகிதமாக உள்ளது. பண்டிகைக் காலம் என்பதால் அக்டோபர் மாதத்தில் இத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகிறது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது முதல்தர நகரங்களான கொல்கத்தாவில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புகள் 45 சதவிகிதமும், மும்பையில் 11 சதவிகிதமும், ஹைதராபாத்தில் 8 சதவிகிதமும், பெங்களூருவில் 4 சதவிகிதமும், டெல்லியில் 1 சதவிகிதமும் ஆன்லைன் வாயிலான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் மான்ஸ்டர் இணையதளத்தின் அறிக்கை கூறுகிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon