மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலா தமிழக போலீஸ்?

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலா தமிழக போலீஸ்?

‘நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி சென்னையில் அமைதிப் பேரணி நடத்திய மாணவர்கள்மீது போலீஸார் மனித உரிமைகளை மீறி நடந்துகொண்டனர். அவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று (செப்டம்பர் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்றைக்கு (12.9.2017) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி செல்வதற்கு அனுமதி பெற்று, மாணவர்கள் அமைதியாகப் பேரணியில் வந்தபோது, பேரணி முடிவதற்கு முன்பாக காவல்துறையினர் மாணவ - மாணவிகள்மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களையும் குறிப்பாக தனியாக இழுத்து தாக்குதல் தொடுத்துள்ளனர்.

காவல்துறையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து பேரணியில் பங்கேற்ற மாணவிகள் அமைதியாக சாலையில் அமர்ந்து கோஷமிட்டபோது, மாணவிகளை ஆண் காவலர்கள் கைகளைப் பிடித்தும், உடைகளைப் பிடித்தும் இழுத்துள்ளனர். இதில் சில மாணவிகளின் உடைகள் கிழிந்துள்ளன. ஆபாசமான வசவுகளுடன் மாணவிகளை தகாத முறையில் தொட்டும், பிடித்துத் தள்ளியும் உள்ளனர். மாணவர்களை மாணவிகள் மீதும், மாணவிகளை மாணவர்கள் மீதும் வேகமாக இடித்துத் தள்ளியுள்ளனர்.

மாணவர்களுடைய கைகளை திருகியும், கால்களை திருகியும், பூட்ஸ் காலால் மிதித்தும், வயிற்றில் குத்தியும், விரல்களை உடைக்க முயற்சித்தும் மற்றும் மாரியப்பன், செந்தில், தீபா, தாமு, நிரூபன், சந்துரு, இசக்கி உள்ளிட்ட மாணவர் - வாலிபர் தலைவர்களை மிகக் கடுமையாகத் தாக்கியதோடு, அவர்கள் தங்களுடைய கைபேசியைக் காணோம் என்று தெரிவித்தபோது, ‘கைபேசி மட்டுமல்ல... நீயும் சிறிது நேரத்தில் காணாமல் போகப் போகிறாய்’ என்று வெறித்தனமாக மிரட்டியுள்ளனர். காவல்துறையின் இந்தத் தாக்குதலில் மாணவிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். இவையனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், இந்தியத் தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் குற்றங்களாகும். காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத, சட்டவிரோத அத்துமீறல் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சட்டப்பேரவையில் ஒருமனதாக அவசரச் சட்டம் இயற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்த நிலையில் பலதரப்பு மக்களும் அவசரச் சட்டத்துக்கு அனுமதி கோரி போராடிக்கொண்டிருக்கும்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்கள் மீது இத்தகைய காட்டுமிராண்டித் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருப்பது தமிழக காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? அல்லது மத்திய பாஜக அரசின் தூண்டுதலில் இயங்குகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். மனித உரிமை மீறல்கள் புரிந்த காவலர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதும் தான் இப்பிரச்னைக்கு தீர்வாகும். மாறாக, போராட்டங்களை ஒடுக்குவதாலோ, போராடுபவர்களை அச்சுறுத்துவதாலோ தமிழக மக்களின் - மாணவர்கள், இளைஞர்களின் கொந்தளிப்பை அடக்கிவிட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon