மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சிறப்புக் கட்டுரை: ஆடை சர்ச்சையில் சிக்கிய மித்தாலி ராஜ்!

சிறப்புக் கட்டுரை: ஆடை சர்ச்சையில் சிக்கிய மித்தாலி ராஜ்!

பிரபலமானவர்கள், அதிலும் பெண் பிரபலங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை வைத்து அவர்களை விமர்சிப்பது நெட்டிசன்களுக்குப் புதிது அல்ல. ஒருவர் அணியும் உடையை வைத்து அவர்களது நடத்தையைத் தொடர்புபடுத்தி விமர்சிப்பது அவர்கள் வழக்கம்.

பிரியங்கா சோப்ரா கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது ஆடைக்காகப் பேசப்பட்டு வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி சென்றபோது நடிகை பிரியங்கா சோப்ரா அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் முன்பு அவர் குட்டைப் பாவாடை அணிந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படத்தைத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்தப் பதிவை பார்த்த பலரும் பிரியங்கா சோப்ராவை அவரது ஆடைக்காக வறுத்து எடுத்தார்கள். அதற்கு பிரியங்கா பதிலடி கொடுக்க, ஊடகங்களில் இரண்டு நாள்களுக்கு இதே பேச்சாக இருந்தது.

தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் (34) அணிந்திருந்த ஆடை குறித்து சர்ச்சை எழுந்திருக்கிறது. உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டி வரை இந்திய மகளிர் அணியை அழைத்துச் சென்றதன் மூலம் பெண்கள் கிரிக்கெட் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைத் திரும்ப வைத்தவர் மித்தாலி ராஜ். நிதானமான அணுகுமுறை, சிறப்பான கேப்டன்ஷிப், திறமையான பேட்டிங் என கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஈர்த்தவர் இவர்.

செப்டம்பர் 5ஆம் தேதி தன் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் மித்தாலி ராஜ் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த ஆடை (ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்) குறித்து பல்வேறு தரப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியப் பெண்கள் அணியின் கேப்டன் இவ்வாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது குறித்து ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.

வளர்ந்துவரும் இளம் வீராங்கனைகள் பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இவர் தவறான முன்னுதாரணமாக மாறியிருக்கிறார் என ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களும், பல்வேறு தரப்பினரும் விமர்சித்துவருகின்றனர். தயவுசெய்து அந்தப் படத்தை நீக்கிவிடுங்கள் எனச் சிலர் வேண்டிக் கேட்டுக்கொண்டார்கள். ஒரு சிலர் மோசமான சொற்களால் வசைபாடவும் தயங்கவில்லை.

இந்தப் புகைப்படத்தை பற்றி நெட்டிசன்கள் செய்துள்ள ட்விட்களில் சில:

“மித்தாலியிடம் இதை எதிர்பார்க்கவில்லை. போட்டி நேரத்தில் புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ள உங்களை பற்றி உயர்வாக மதிப்பீடு செய்திருந்தோம். இப்படி உடலைக் காண்பித்தபடி போட்டோ வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.”

“நீங்கள் இப்படி உடை அணிவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை!”

“நீங்கள் ஒன்றும் நடிகையல்ல; கிரிக்கெட் வீராங்கனை. ஏன் இவ்வளவு கிளாமராக ஆடை அணிகிறீர்கள்?”

“நீங்கள் ஒரு வழிகாட்டி; இப்படியெல்லாம் உடை அணியக் கூடாது!”

“நீங்கள் ஆபாசப் பட நட்சத்திரமா?”

“ஆணோ, பெண்ணோ, தாதா கங்குலியிடமிருந்துதான் இந்த ஐடியாவைப் பெற்றுக்கொண்டீர்களா?”.

பலரும் விமர்சித்தாலும் சிலர் மித்தாலிக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ஆண்களில் பெரும்பாலானோர் இது தவறு என்றும் டிவிட் செய்துள்ளனர். இதனால் இந்த போட்டோவுக்கு பல ஆயிரம் கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.

இதற்கு முன்பும் கூட மித்தாலி ராஜுக்கு இது போன்ற பிரச்னை ஒன்று ஏற்பட்டது. அதுவும் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தது. மித்தாலி ராஜ் தனது இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் மித்தாலி ராஜின் மீது வியர்வை படிந்திருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் உங்களுக்குச் சங்கடமாக இல்லையா என கேட்டு விமர்சித்திருந்தனர். இதற்குப் பதிலளித்த மித்தாலி ராஜ், ‘ஆம் என் மேல் வியர்வை படிந்துள்ளது. ஆனால், எனக்கு எந்த சங்கடமும் இல்லை’ என தெரிவித்திருந்தார். ‘நான் உழைக்கும்போது வந்த இந்த வியர்வைதான் என்னை உயர்த்தியுள்ளது. இதனால் எனக்கு எந்த வித சங்கடமும் பாதிப்பும் இல்லை.’ இவ்வாறு பதிலடி கொடுத்திருந்தார்.

பொறுப்பும் சுதந்திரமும்

விளையாட்டுத் துறை என்றல்ல, எந்தத் துறையிலும் சாதனை படைத்த ஆளுமைகள் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பிரபலங்களுக்குச் சமூகத்தில் பொறுப்பு அதிகம் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. சமூக, சட்ட விரோத நடவடிக்கைகளிலோ, உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளிலோ பிரபலங்கள் எல்லை மீறினால் அது தவறு எனக் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் ஒரு பெண்ணின் ஆடை எப்படி இந்தக் கணக்கில் வரும்? ஏன் விராட் கோலியின் ஆடையோ ஷிகர் தவனின் ஆடையோ இதுபோல சர்ச்சையாக்கப்படுவதில்லை? பெண்னின் ஆடையை எப்படிச் சர்ச்சைப் பொருளாக்கலாம் என்பது சமூக அக்கறை கொண்டவர்களின் கேள்வியாக உள்ளது. இந்த ஆணாதிக்கச் சமூகம் ஒரு பெண்ணை அவள் உடையை வைத்து மதிப்பிடும் தவறைத் தொடர்ந்து செய்துவருகிறது. ஆடை என்பது ஒழுக்கம் சார்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது. பக்குவமற்ற இந்தப் பார்வையை மாற்றிக்கொள்வதுதான் இதற்கான தீர்வு என்றும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆடையை வைத்து ஒரு பெண்ணின் நடத்தையை, ஆளுமையை மதிப்பிடும் தவறை இந்தச் சமுதாயம் எப்போது மாற்றிக்கொள்ளப்போகிறது?

-வித்யா

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon