மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இதையொட்டி திமுக சார்பில் கடந்த 8ஆம் தேதி திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக, வருகிற 13ஆம் தேதி (இன்று) மாவட்டத் தலைநகரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், “நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ள திமுகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்துள்ள திமுகவைக் கண்டித்து வரும் 15ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஆளுநரைப் பற்றிப் பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை. அவருக்குத் தகுதியில்லை என்பதால்தான் கருணாநிதி தலைவர் பதவியை இன்னும் தரவில்லை. தமிழகத்தில் ஏதேதோ காரணங்களைச் சொல்லி போராட்டம் நடத்தப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கடந்த 8ஆம் தேதி திருச்சியில் நடத்தப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டத்துக்குப் பின், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே இடத்தில், கடந்த 9ஆம் தேதி பாஜக சார்பில் நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தகது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon