மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

தமிழகத்தில் பாஜக தேர்தலை விரும்பவில்லை: திருமாவளவன்

தமிழகத்தில் பாஜக தேர்தலை விரும்பவில்லை: திருமாவளவன்

‘தற்போது தேர்தல் வந்தால் அது திமுகவுக்குச் சாதகமாகிவிடும் என்பதால், தமிழகத்துக்குத் தேர்தல் வருவதை பாஜக விரும்பவில்லை’ என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வருக்கான ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் வாபஸ் பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளுநரைச் சந்தித்து சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு தற்போது வரை ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த வாரம் ஆளுநரைச் சந்தித்த பின் திருமாவளவன், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தான் தலையிட முடியாது என்று ஆளுநர் தங்களிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திமுக சார்பில், சட்டசபையைக் கூட்டி முதல்வரை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நேற்று (செப்டம்பர் 12) சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். தேர்தல் வந்தால் அது திமுகவுக்குச் சாதகமாக அமையும் என்பதால், தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு உடனடியாக தேர்தல் வருவதை பாஜக விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon