மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சிறப்புக் கட்டுரை: கடனில் மூழ்கிய ஏர் இந்தியா உயரப் பறக்குமா? - மானு பாலச்சந்திரன்

சிறப்புக் கட்டுரை: கடனில் மூழ்கிய ஏர் இந்தியா உயரப் பறக்குமா? - மானு பாலச்சந்திரன்

கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை நரேந்திர மோடியின் அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்தது. ஏர் இந்தியாவை வாங்க டெல்லியைச் சேர்ந்த ஒரு பிரபலமில்லாத குழுமம் ஆர்வம் காட்டியது.

போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள், சில்லறை வணிகம், கல்வி போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த ‘தி பேர்ட் க்ரூப்’ என்ற நிறுவனம், சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்படும் ஏர் இந்தியாவின் கிளை நிறுவனமான ‘ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ்’ நிறுவனத்தை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்தது. ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் 636 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இந்நிறுவனத்தில் 12,000க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். எழுபது இந்திய விமான நிலையங்களில் தரையில் கையாளும் சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. விமானத்தைச் சுத்தம் செய்வது, உணவுப் பொருட்கள், பானங்கள், சரக்கு, பயணிகளின் சாமான்களை விமானத்தில் ஏற்றி இறக்குவது போன்ற பணிகளை ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் நிறுவனம் செய்து வருகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க தி பேர்ட் க்ரூப் நிறுவனம் ஆர்வம் காட்டியதை இந்திய விமானத்துறை செயலாளர் ஆர்.என்.சவுபே ஆகஸ்ட் 30ஆம் தேதி உறுதி செய்தார். ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஏற்கனவே இண்டிகோ நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்தது.

1932ஆம் ஆண்டில் ‘டாடா ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது. அதுமுதல் தனியாக செயல்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 2007ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைத்து ‘இந்திய தேசிய விமான நிறுவனம்’ என்ற நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கியது. ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு விமானச் சேவைகளை மட்டுமே வழங்கி வந்தது. உள்நாட்டு விமானச் சேவைகளை வழங்கும் அரசின் நிறுவனமாக இந்தியன் ஏர்லைன்ஸ் செயல்பட்டு வந்தது. ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே இழப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன. 2007ஆம் ஆண்டு வரையில் ஏர் இந்தியா நிறுவனம் 541 கோடி ரூபாய் நஷ்டத்திலும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 240 கோடி ரூபாய் நஷ்டத்திலும் இயங்கிக் கொண்டிருந்தன. இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்ட பிறகு, இந்திய தேசிய விமான நிறுவனத்தின் மொத்தக் கடன் 60,000 கோடி ரூபாயாக கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டது. இதனால் வேறு வழியின்றி இந்நிறுவனத்தை விற்க வேண்டிய நிலைக்கு அரசாங்கமும் தள்ளப்பட்டது.

பேர்ட் க்ரூப்பின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் குவார்ட்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஏர் இந்தியாவின் பங்குகளைப் பிரித்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்தால், முதலில் கிளை நிறுவனங்களை விற்பனை செய்துவிட்டால் நன்றாக இருக்கும். தரையில் சேவைகளைக் கையாளும் கிளை நிறுவனத்தை வாங்க நாஙள் விருப்பம் தெரிவித்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

டெல்லி, மும்பை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட ஏழு முக்கிய விமான நிலையங்களில் தி பேர்ட் க்ரூப் நிறுவனம் தரையில் விமானம் சார்ந்த சேவைகளை கையாண்டு வருகிறது. மேலும், பி.எம்.டபுள்யு, மினி கூப்பர் ஆகிய சொகுசு கார்களின் விற்பனை நிலையங்களையும் டெல்லியில் நடத்தி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நட்சத்திர ஓட்டல்களையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. 2010ஆம் ஆண்டில் செக்வே என்னும் ஸ்கூட்டர் நிறுவனத்தை இக்குழுமம் விலைக்கு வாங்கியது. மொத்தமாக, இக்குழுமத்துக்கு உலகம் முழுவதும் 45 அலுவலகங்கள் உள்ளன. 9,000க்கும் மேற்பட்டோர் இக்குழுமத்தில் பணிபுரிகின்றனர். 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானத்தில் இந்நிறுவனம் தன் தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் ஆரம்பகாலத்தில் விஜய் பத்தியா என்பவரின் தலைமையில் இந்நிறுவனம் ஒரு டிராவல் ஏஜன்சியாக செயல்பட்டு வந்தது.

விஜய் பத்தியா என்பவர் 1946ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார். அவருக்கு தற்போது 71 வயதாகிறது. இவரது பெற்றோர்கள் அரசு ஊழியர்களாக பணிபுரிந்தனர். பிறகு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இவரின் பெற்றோர் டெல்லிக்கு வந்துவிட்டனர்.

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் பயின்ற விஜய் பத்தியா 1971ஆம் ஆண்டில், சிறு தொழில்களுக்கு சேவை செய்ய டிராவல் ஏஜன்சி ஒன்றை தொடங்கினார். வாரனாசியின் கம்பள விற்பனையாளர்கள், கான்பூரின் தோல்பொருள் உற்பத்தியாளர்கள், டெல்லியின் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இவரின் வாடிக்கையாளர்களாக இருந்தனர். பிறகு, ஜெர்மன் நாட்டின் விமானச் சேவை நிறுவனமான லஃப்தான்சா நிறுவனத்தின் பிராந்தியப் பிரதிநிதியாக பேர்ட் டிராவல்ஸ் நியமிக்கப்பட்டது. சில வருடங்களுக்கு பிறகு விஜயின் மனைவியான ராதா அவரின் தொழிலில் இணைந்துவிட்டார். அவர் தற்போது பேர்ட் க்ரூப்பின் தலைவராக இருந்து வருகிறார்.

மேட்ரிடைச் சேர்ந்த அமெடியஸ் என்ற நிறுவனத்துடன் பேர்ட் நிறுவனம் 1994ஆம் ஆண்டில் கூட்டணி அமைத்துக் கொண்டது. இந்தியாவில் விமான டிக்கட்டுகளை விற்பனை செய்யும் சேவையை வழங்க இக்கூட்டணி அமைக்கப்பட்டது. இதன் மூலம் பேர்ட் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்தது. அதன் பிறகு தன் தொழிலை பேர்ட் நிறுவனம் விரிவாக்கிக் கொண்டது. விமானச் சேவை, விமான நிலையத்தில் சேவைகள், வாடிக்கையாளர் நிர்வாகம், சரக்கு மற்றும் பயணிகளின் சாமான்களை மேலாண்மை செய்தல் போன்ற சேவைகளில் தற்போது பேர்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும் தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்கு உள்கட்டமைப்பை இந்நிறுவனம் வழங்குகிறது. கடந்த ஆண்டு முதல் விமானப் பராமரிப்பு, பழுது பார்த்தல், முழு விமானத்தையும் பழுது பார்த்தல் போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் தரையைக் கையாளும் சேவைகளை மேற்கொள்ள அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள மூன்று நிறுவனங்களில் பேர்ட் நிறுவனமும் ஒன்றாகும். மற்ற நிறுவனங்கள் எல்லாம் விமான நிலைய நிர்வாகத்தாலோ, விமானச் சேவை நிறுவனத்தாலோ தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்தியாவில் வணிக விமானச் சேவைகளுக்காக 76 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 63 விமான நிலையங்களில் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. ஏர் இந்தியாவின் 86,837 விமானங்களுக்கு மட்டுமல்லாமல், 30 வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களின் 27,270 விமானங்களுக்கும் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. இதை விலைக்கு வாங்கினால் பேர்ட் குழுமத்தின் தொழில் பலமடங்கு வளர்ச்சி அடையும். ஏர் டிரான்ஸ்போர் சர்வீசஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்காக ஒரு பங்குதாரரை சேர்த்துக் கொள்ள பேர்ட் குழுமம் ஆலோசித்து வருகிறது.

நன்றி: குவார்ட்ஸ்

தமிழில்: அ.விக்னேஷ்

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon