மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

அந்நிய முதலீடு 15% சரிவு!

அந்நிய முதலீடு 15% சரிவு!

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் அந்நிய நேரடி முதலீடுகள் ஆகஸ்ட் மாதத்தில் 15 சதவிகிதம் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் 2016ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வெளிநாடுகளில் 1.57 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தன. ஆனால், நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனங்கள் மேற்கொண்ட அந்நிய நேரடி முதலீடு 1.34 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 15 சதவிகித சரிவாகும். இதற்கு முந்தைய மாதத்தை ஒப்பிடும்போதும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில் மேற்கொண்ட அந்நிய நேரடி முதலீடு 1.77 பில்லியன் டாலர்களாகும். இந்தத் தகவல்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘வெளியீட்டு அந்நிய நேரடி முதலீடுகள்’ என்ற அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.

இந்திய நிறுவனங்களிலேயே அதிகபட்சமாக விப்ரோ லிமிடெட் நிறுவனம் அமெரிக்காவில் 500 மில்லியன் டாலர்களையும், நெதர்லாந்தில் 102.50 மில்லியன் டாலர்களையும் முதலீடு செய்துள்ளது. டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் 78.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மியான்மர், ரஷ்யா, வியாட்நாம் ஆகிய நாடுகளில் மொத்தமாக 55.54 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon