மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

விமானத்தில் ஏ.சி. செயல்படாததால் மயங்கிய பயணிகள்!

விமானத்தில் ஏ.சி. செயல்படாததால் மயங்கிய பயணிகள்!

விமானத்தில் ஏ.சி. வேலை செய்யாததால் பயணிகள் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் மதினா நகரத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு, சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SV -706 விமானம் கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டது. இந்த விமானத்தில் புனித பயணம் மேற்கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் இருந்துள்ளனர்.

விமானத்தில் ஏறிய பயணிகள் ஏ.சி. வேலை செய்யாததால் கவலையடைந்தனர். இது தொடர்பாக விமானப் பணிக்குழுவினரிடமும் அவர்கள் முறையிட்டனர். விமானம் கிளம்புவதற்கு முன்பாக பிரச்னை சரி செய்யப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், கோளாறு சரி செய்யப்படாமலேயே இருந்ததால் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பலரும் மயங்கி விழுந்தனர்.

இது தொடர்பாக கராச்சி விமான நிலைய ஊழியர் ஒருவர் கூறுகையில், “விமானத்தின் ஏ.சியில் கோளாறு இருந்ததால்தான் அது புறப்படுவதற்கு தாமதமானது. எனினும் விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர்” என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து விமானத்தில் பயணித்த சாரா இக்பால் என்ற பயணி கூறியதாவது, “அறிவிக்கப்பட்டதை விட இரண்டு மணி நேரம் தாமதமாகவே விமானம் புறப்பட்டது. விமானத்தில் குளிர்சாதன வசதி இல்லாததை அறிந்தோம். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வியர்த்துக் கொட்ட தொடங்கியது.

இருக்கைகள் மிகவும் வெப்பமடையத் தொடங்கியது. முதியோர்கள் மயக்கமடைய தொடங்கினர். விமானத்தில் இருந்த மருத்துவர்கள் அவர்களுக்கு உதவினர். மேலும் அவர்களின் மயக்கத்துக்கு விமானத்தின் நிலை காரணமல்ல என்ற விமானப் பணிக்குழுவினர் கையெழுத்து வாங்கத் தொடங்கினர். மறுப்பு தெரிவித்தவர்களிடம் மோசமாக நடந்துகொண்டனர்” என்று தெரிவித்தார்.

பயணிகள் மயக்கமடைந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon