மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பிரியங்காவின் இயக்குநர் கனவு?

பிரியங்காவின் இயக்குநர் கனவு?

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்திய சினிமா, உலக சினிமா என வளர்ந்திருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து வருகிறார். தனது நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பாஹுனா’ திரைப்படம் தந்த வரவேற்பை அடுத்து தனது இயக்குநர் கனவு பற்றி மனம் திறந்துள்ளார் பிரியங்கா.

அவரது முதல் வடகிழக்கு தயாரிப்பான ‘பாஹுனா: தி லிட்டில் விஸிட்டர்ஸ்’ என்ற திரைப்படம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பாஹுனா திரைப்படம், பெற்றோரைப் பிரிந்த மூன்று நேபாளக் குழந்தைகள், மீண்டும் தங்கள் வீட்டுக்குப் பயணப்படுவதை சொல்லும் கதையாகும். படத்துக்கு ரசிகர்கள் ஏகோபித்த பாராட்டுகளை வழங்கி வருகின்றனர்.

இந்தத் திரையிடலை ஒட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பிரியங்கா பகிர்ந்திருந்தார். அதில், “இல்லை என்ற சொல்லை ஏற்காதீர்கள். ஏனென்றால் யாரோ ஒருவர் ஆமாம் என்று சொல்லத் தயாராக இருப்பார். எனது முதல் பெண் இயக்குநர் பாகி ஏ டயர்வாலா குறித்து பெருமை கொள்கிறேன். இந்தப் படத்தை எடுக்க முடியாது என்று சொன்னவர்கள் முன்னால் தைரியமாக விடாமல் உழைத்தார்” என இயக்குநர் பற்றி பெருமையாகப் பேசினார்.

தொடர்ந்து தனது இயக்குநர் கனவு குறித்து தெரிவிக்கையில், “வணிகரீதி படம் என சிலர் கருதாத ஓர் அழகான கதையைச் சொல்ல நினைத்ததற்கு பாராட்டுகள். இன்று சர்வதேச தளத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. கரவொலிகள் நீண்ட நேரம் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இந்த முயற்சிக்கு மக்கள் எழுந்து நின்று கை தட்டியதைப் பார்க்கும்போது நெகிழ்ந்துவிட்டேன். இதுதான், இந்த உணர்வுக்காகத்தான் நான் இயக்குநராக வேண்டும் என நினைத்தேன்” என்று பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon