மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பழனி மலைக்கோயில்: ரோப் கார் சேவை நிறுத்தம்!

பழனி மலைக்கோயில்: ரோப் கார் சேவை நிறுத்தம்!

பழனி மலைக்கோயிலில் பராமரிப்பு பணி நிமித்தமாக மக்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த ரோப் கார் சேவை நேற்று (செப் 12) முதல் ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது . தமிழகத்தில் இந்த கோயிலில்தான் முதன்முதலாகப் பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மற்ற கோயில்களில் இந்தப் பழக்கம் பின்பற்றப்பட்டது.

இந்தச் சிறப்பு பெற்ற கோயிலுக்கு வரும் மக்களுக்கு வசதியாக மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் வசதி பயன்பாட்டில் உள்ளன. ரோப் கார் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்காக மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் ரோப் கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பராமரிப்பு பணிக்காக நேற்று முதல் ஒரு மாதத்துக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரோப் கார் சேவை மீண்டும் அடுத்த மாதம் 12ஆம் தேதி தொடங்கும். அதுவரை, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon