மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பெலாரஸ் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம்!

பெலாரஸ் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம்!

இந்தியா - பெலாரஸ் நாடுகளுக்கிடையே நல்லுறவைப் பலப்படுத்தும் வகையில் பத்து உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளன.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில் 10 உடன்படிக்கைகளில் செப்டம்பர் 12ஆம் தேதி இந்தியாவும் பெலாரஸும் கையெழுத்திட்டுள்ளன. இருதரப்புகளின் உறவைப் பலப்படுத்தவும், ராணுவ சாதனங்களை உற்பத்தி செய்யவும் கூட்டு நலத்திட்டங்களில் முயற்சிக்கவும் இந்த உடன்படிக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பெலாரஸ் அதிபர் ஏ.ஜி.லுகஷெங்கோவும் பேசுகையில், இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஈடுபாட்டை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். இருநாடுகளுக்கும் இடையே வணிகத்தையும், முதலீட்டையும் வலுவாக்க ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ சாதனங்கள் உற்பத்தியையும், கூட்டு மேம்பாட்டுத் திட்டங்களையும் நாங்கள் ஊக்குவிப்போம். இந்தியாவுக்கும் பெலாரஸுக்கும் இடையேயான நட்பை நானும் லுகஷெங்கோவும் மதிப்பாய்வு செய்தோம். இருதரப்புக்கும் இடையேயான நட்பை மேம்படுத்தக் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்” என்று பேசினார். எண்ணெய், எரிவாயு, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இருதரப்புக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளன.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது