மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

திசைகாட்டிய திருக்கச்சி நம்பிகள்!

 திசைகாட்டிய திருக்கச்சி நம்பிகள்!

மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே
திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே

மேலே கண்ட பாடல், பூந்தமல்லியை பிறந்த ஊராகக் கொண்ட திருக்கச்சி நம்பிகளின் வாழித் திருநாமம். திருக்கச்சி நம்பிகளின் சிறப்புகளை மேற்கண்ட ஒவ்வொரு வரியும் சொல்கின்றன.

பூந்தமல்லி என்ற பெயர் இப்போது நாம் வழங்கப்படும் தமிழ். அழகான ஒரு பூவை பிய்த்துக் கசக்குவதைப் போன்றதுதான் பூந்தமல்லி என்ற இன்றைய பெயரும். பண்டைய காலத்தில் இந்த தலத்தின் பெயர் பூந்தண்மலி என்பதுதான். அதாவது தண் என்றால் குளிர்ந்த, மலி என்றால் அதிக அளவு. குளிர்ந்த மலர்கள் அதிக அளவு நிறைந்த ஊர்தான் பூந்தண் மலி. இத்தலத்தில் திருக்கச்சி நம்பிகள் நந்தவனம் அமைத்து காஞ்சி வரதனுக்கு தினமும் பூக்கள் கொண்டு சென்றதால் புஷ்பமங்கலம் என்றும் பூ இருந்தவல்லி என்றும் பெயர் பெற்றது. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தாயார் பெயர் பூவிருந்தவல்லி. பூவில் இருந்து தோன்றியவள் என்பதால் இந்தப் பெயர் வந்தது. ஆக அழகான, இயற்கையான பெயர் கொண்ட பூந்தண்மலி அல்லது பூவிருந்தவல்லி என்று பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது.

பழைய கல்வெட்டுகளில் இது பூந்தண்மலி என்றே அழைக்கப்படுகிறது. புலியூர் கோட்டத்துப் பூந்தண்மலி என்ற தொடர், இவ்வூரிலுள்ள முதற்பராந்தகன் காலத்துக்குக் கல்வெட்டில் காணப்படுகிறது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரைச் சேர்ந்த திருக்கச்சி நம்பிகள் ராமானுஜரின் வாழ்க்கையிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்புமுனையை ஏற்படுத்தியவர்.

ராமானுஜர் தன் இளம் பிராயத்தில் தினம் தினம் திருக்கச்சி நம்பிகளை சந்தித்தவர். ராமானுஜருக்கு முன்பிருந்தே அவரது குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் திருக்கச்சி நம்பிகள். ராமானுஜரின் தாய்மாமனான பெரிய திருமலை நம்பிகளோடும், ராமானுஜரின் தந்தையாரான கேசவ சோமயாஜியோடும் நெருங்கிய நட்புகொண்டிருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.

இந்த நெருக்கத்தின் காரணமாகவும்... திருக்கச்சி நம்பிகள் பூந்தண்மலியில் பூ பறித்து அதை தினமும் காஞ்சி சென்று வரதராஜனுக்கு சாற்றிவரும் வைணவப் பொறுப்புணர்ச்சி காரணமாகவும் ராமானுஜருக்கு இளம் வயதிலேயே அவர் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் திருக்கச்சி நம்பிகளின் குடும்பப் பின்னணியைப் பற்றி அறிந்த ராமானுஜருக்கு அவர் மேல் மிகப்பெரிய மரியாதை உண்டானது.

ஆம். திருக்கச்சி நம்பிகளின் தந்தை பெயர் வீரராகவ செட்டியார். மிகச் சிறந்த வணிகர். தனது நான்கு மகன்களுக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுத்து இனி நீங்கள் வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அவரே வழிகாட்டினார். மற்ற மூன்று பிள்ளைகளும் வியாபாரத்தில் ஈடுபாடு காட்டினார்கள். ஆனால் திருக்கச்சி நம்பிகளோ வியாபாரத்தை விட வைணவத்தில் ஈடுபாடு காட்டினார். இந்த உலகுக்கு வேண்டுமானால் வியாபாரம் உதவலாம்., ஆனால் இந்தப் பிறவியை கடப்பதற்கு வைணவமே உதவும் என்று நம்பினார்.

அதன்படி திருவல்லிக்கேணி பெருமாளுக்கு கைங்கரியம் செய்ய ஆரம்பித்தார். பின் காஞ்சிபுரம் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய ஆரம்பித்தார். திருக்கச்சி நம்பிகள் நினைத்தால் அந்தக் காலத்தில் பல்லக்கு ஒன்றை வாங்கி அதில் தான் அமர்ந்து தொழிலாளர்களுக்குக் கூலிகொடுத்து தூக்கவைத்து பவனி வந்திருக்க முடியும். ஆனால், அவர் பூப்பறித்து காஞ்சிபுரத்துக்கு நடந்து சென்று பெருமாளுக்கு சாற்றவே பிரியப்பட்டார். மற்ற சகோதரர்கள் வியாபாரம் பார்த்து ஊர் ஊராய் போய் பேசிக் கொண்டிருந்த நிலையில், திருக்கச்சி நம்பிகள் வைணவம் பார்த்ததால் பெருமாளோடே பேசினார்.

இப்படிப்பட்ட மகோன்னதமான வாழ்க்கையை மிக எளிமையாக வாழ்ந்து வந்த திருக்கச்சி நம்பிகளைப் பார்த்துதான் ராமானுஜர் முதலில் வியந்தார். அவரோடு பழகினார். அவரோடு உலவினார். அவரோடு காஞ்சி சென்றார். திருக்கச்சி நம்பிகள் ராமானுஜரை விட எட்டுவயது அதிகம் என்றாலும் ராமானுஜருக்கு உள்ள திறமைகளை அவரும் அறிந்திருந்தார்.

இந்த உலகத்தில் பொருள் எதற்கும் உதவாது என்பதை தன் சிறுவயதிலேயே திருக்கச்சி நம்பிகள் மூலமாக புரிந்துகொண்டார் ராமானுஜர். அதைவிட திருக்கச்சி நம்பிகள் காஞ்சி பெருமாளைப் பற்றி வடமொழியில் இயற்றிய ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்ற எட்டு மந்திரங்களும்தான் ராமானுஜருக்கு பிரம்மச்சரியத்தின் திசையைக் காட்டின.

தேவராஜ அஷ்டகம்?

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுனவராகவும், வைணவத் தொண்டராகவும் என்றும் திகழும் ஜெகத்ரட்சகன் ராமானுஜர் பற்றி மட்டுமல்ல, அவரது வைணவ குழாம் பற்றியும் பல்வேறு நலச் சிந்தனைகளை தமிழ் கூறும் நல்லுலகத்தில் பரப்பி வருகிறார். இது வைணவத்துக்குச் செய்யும் வரலாற்றுத் தொண்டாகும்!

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்… ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon