மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

டிஜிட்டல் திண்ணை: பொதுக்குழு வெற்றி... எடப்பாடியின் அடுத்த அட்டாக்!

டிஜிட்டல் திண்ணை:  பொதுக்குழு வெற்றி... எடப்பாடியின் அடுத்த அட்டாக்!

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “அதிமுக பொதுக்குழுவில் இருக்கேன். வெய்ட்...” என முதலில் மெசேஜ் வந்து விழுந்தது. பிறகு விலாவாரியாக வந்து விழுந்தது அடுத்த மெசேஜ்.

“அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி சாதித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா நீக்கம், தினகரனின் நீக்க அறிவிப்புகள் எதுவும் செல்லாது என எல்லாம் எதிர்பார்த்ததுபோலவே நடந்தன. பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்குத்தான் முதலில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

‘சசிகலா குடும்பமும் அவங்களை சேர்ந்தவங்களும் நம்மையெல்லாம் என்ன பாடுபடுத்திட்டு இருக்காங்க.. பதவிக்காக நம்மையே இவ்வளவு பாடுபடுத்துறவங்க நம்ம அம்மாவை எவ்வளவு பாடுபடுத்தி இருப்பாங்க? நினைச்சு பார்க்கவே பயங்கரமா இருக்கு. அம்மாவை நிச்சயமா அவங்க பாடாய் படுத்தி இருப்பாங்க. அவங்களோட நோக்கமெல்லாம் பணமும் பதவியும்தான். அதுக்காக எதையும் செய்யத் தயாராகிட்டாங்க. இது தலைவர் ஆரம்பிச்ச கட்சி. அம்மா வளர்த்த கட்சி. எந்தக் காரணத்துகாகவும் அம்மா வளர்த்த கட்சியை நாம விட்டுடக் கூடாது. இந்தப் பொதுக்குழு தீர்மானம் எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என நாங்க எல்லாம் நம்பிக்கையோடு வந்திருக்கோம்...’ என்று தொடக்க உரையிலேயே சசிகலா குடும்பத்துக்கு எதிராக சிக்ஸர் அடித்தார்.

அதன் பிறகு பொதுக்குழு தீர்மானங்களை வாசிக்கும் பொறுப்பு அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டது. தீர்மானங்களை ஒரு வரி விடாமல் கடகடவென வாசிக்க ஆரம்பித்தார். சசிகலாவைப் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பதையும், அவரைக் கட்சியில் இருந்து நீக்கி வைக்கும் தீர்மானத்தையும் நிறுத்தி நிதானமாகவே படித்தார். தினகரனின் அறிவிப்புகள் எதுவும் செல்லாது என அறிவித்த உதயகுமார், தினகரனைக் கட்சியில் இருந்து நீக்க தேவை இல்லை. ஏனென்றால் அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினரே இல்லை...’ என்றும் ஒரே போடாக போட்டார்.

பன்னீர் செல்வம் பேசும் போது, ‘இங்கே நடக்கிறதை எல்லாம் அம்மாவின் ஆன்மா பார்த்துட்டுதான் இருக்கு. இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் ஆன்மா இங்கேதான் சுத்தி வந்துட்டு இருக்கும். நம்மை எல்லாம் விட்டு அம்மாவால் பிரிந்து இருக்க முடியாது. அந்தக் குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதைத்தான் அம்மாவும் விரும்புவார்கள்...’ என்று மிகச் சுருக்கமாகவே முடித்தார்.

நிகழ்ச்சியில் கடைசியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கினார். ‘இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என சிலர் கனவு கண்டுட்டு இருக்காங்க. கட்சியையும் சரி... ஆட்சியையும் சரி... யாராலும் அழிக்கவும் முடியாது... அகற்றவும் முடியாது. நான் ஏதோ கட்சிக்கு துரோகம் பண்ணிட்டதாக தினகரன் சொல்லிட்டு இருக்காரு. 10 வருசத்துக்கு முன்னாடி காணாமல் போனவர் இப்போ வந்து கூச்சல் போட்டுட்டு இருக்காரு. அப்போ காணமல் போய்ட்டு இப்போ எங்கிருந்து முளைச்சு வந்தாரு? நாங்க செஞ்சது துரோகமா? இல்லை அந்தம்மா குடும்பம் செஞ்சது துரோகமா? அம்மாவுக்கு நாங்க என்ன துரோகம் செஞ்சோம்? யாரு செஞ்சது துரோகம்னு உங்களுக்கும் தெரியும்... அம்மாவுக்கும் தெரியும். இனியும் அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலையை ஆட்டிட்டு அமைதியாக இருக்க முடியாது..’ என கொந்தளிப்புடன்தான் இருந்தது முதல்வரின் பேச்சு. பொதுக்குழுவின் நிறைவில் அமைச்சர் சி.வி.சண்முகம் நன்றி சொல்ல.. கூட்டம் கலைந்தது.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“நிர்வாகிகள் ரியாக்‌ஷன் என்ன?” என ஃபேஸ்புக் கேட்டது.

“சசிகலாவை நீக்குவதாக ஆர்.பி. உதயகுமார் வாசிக்க... வாசிக்க... கைதட்டலும் விசில் சத்தமும் மண்டபத்தைத் தாண்டி வெளியே கேட்டது. ‘ஒருவழியாக எல்லாத்தையும் நீக்கிட்டாங்க. இனிமேல் அவங்களை பார்த்து பயப்பட தேவை இல்லை...’ என வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது. கூட்டத்தில் சசிகலாவை நீக்குவதாக அறிவித்தபோது எந்த சலசலப்பும் வரவில்லை. நாம் நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொன்னது போல, கட்சியில் ஒருவரை நீக்க... சேர்க்க எல்லா அதிகாரங்களும் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தினகரனை ரொம்பவே டென்ஷன் ஆக்கிவிட்டது. உடனே பத்திரிகையாளர்களிடம் பேசியவர், ‘இந்த ஆட்சியை அகற்றாமல் ஓய மாட்டோம்...’ என்று சொன்னார்” என்று முடிந்தது அடுத்த மெசேஜ்.

“பொதுக்குழு முடிவதற்குள்ளாகவே தமிழக போலீஸார் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ஹோட்டலைச் சுற்றிவளைத்ததாக ஒரு தகவல் பரவியதே...’’ என்று மீண்டும் ஃபேஸ்புக் ஒரு கேள்வியைக் கேட்க... பதிலை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

“நேற்று சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு நடத்தத் தடையில்லை என்று உத்தரவிட்ட சில மணித்துளிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அண்டர் கிரவுண்ட் ஆபரேஷன் ஸ்டார்ட் ஆனது. அதாவது... தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினரை முதல்வரின் வட்டாரத்தினர் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். ‘இங்க பாருங்க. கட்சி எல்லாமே எங்களுக்குதான்னு ஆயிடுச்சு. இனியும் அந்த குடும்பத்தை நம்பி வீணாப் போக வேண்டாம்னு உங்க கணவர் கிட்ட சொல்லுங்க’ என்று பதமாகப் பேசியவர்கள், நான்கு எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினரிடம், ‘தினகரனைப் பார்க்கப் போவதாக சொல்லிவிட்டுப் போன எம்.எல்.ஏ. திரும்பி வரவில்லை’ என்று எழுத்துபூர்வமாக புகார் ரீதியிலான கடிதத்தை கைப்பட வாங்கியிருக்கிறார்கள்.

இதை வைத்துக்கொண்டுதான் தமிழக போலீஸார் பொதுக்குழு நடந்துகொண்டிருக்கும்போதே கர்நாடகா மாநிலம் குடகு பகுதிக்குச் சென்று எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குள் நுழைந்தார்களாம். எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக அங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களை அழைத்து வருவதற்குத்தான் இந்த ஏற்பாடு. ஒரு வேளை இதிலும் வெற்றிஅடைந்துவிட்டால் தினகரன் தரப்பினர், ஏன் தினகரன் மீதே கடத்தல் வழக்குப் பதிவானாலும் ஆச்சரியம் இல்லை. அந்த வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது எடப்பாடி எக்ஸ்பிரஸ்’’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது. இதை ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

செவ்வாய், 12 செப் 2017

அடுத்ததுchevronRight icon