மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

தீர்மானங்கள் குறித்து கவலைப்படவில்லை : திவாகரன்

தீர்மானங்கள் குறித்து கவலைப்படவில்லை : திவாகரன்

இன்று நடைபெற்றது அதிமுகவின் பொதுக்குழுவே அல்ல, எனவே அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கவலைப்படவில்லை என்று, சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து இன்று( செப்டம்பர் 12) நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவை நியமன பொதுச்செயலாளராக்கியது ரத்து செய்யப்படுகிறது, ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர், இனி அதிமுகவில் பொதுச்செயலாளர் என்கிற பதவியே கிடையாது, தினகரனின் அறிவிப்புகள் செல்லாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு மதுரையில் எதிர்வினையாற்றிய அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன்,' கூடியது பொதுக்குழுவே அல்ல, அது வெறும் கூட்டம். பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்' என்று கூறினார்.

இந்த சூழ்நிலையில் பொதுக்குழு குறித்து மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன்,' பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் இது அதிமுகவின் பொதுக்குழுவே அல்ல, எனவே தீர்மானங்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மைசூரில் உள்ளனர். அவர்களுக்கு இந்த பொதுக்குழு குறித்து எந்த அழைப்பும் சென்றதாக தெரியவில்லை.

தற்போது தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை இருந்து வருகிறது. எடப்பாடி அணியினர் எங்களை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அப்படி அழைத்தால், "ஊழல் அமைச்சர்களை நீக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இல்லாத மந்திரி சபை அமைக்கப்பட வேண்டும்" என்பதே என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon