மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள்: ஸ்டாலின் வழக்கு!

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள்:  ஸ்டாலின் வழக்கு!

சட்டசபையைக் கூட்டிப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. சட்டமன்றத்தைக் கூட்டி முதல்வரைப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. திமுக சார்பில் இதற்காக இரண்டு முறை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,"ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம், நடவடிக்கை இல்லையெனில் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம்” என்று கூறியிருந்தார். தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், சட்டசபையைக் கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று இன்று (செப்டம்பர் 12) சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. ஏற்கனவே ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறியிருந்தோம், அதன் அடிப்படையில், ஆளுநர் ஜனநாயக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டதால், தற்போது சட்டமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது. அப்படிக் கூடினால் திமுக நிச்சயம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு பெரும்பான்மை உள்ளது என்று நினைத்தால், அவரே ஆளுநரிடம் பரிந்துரை செய்து சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கலாம்” என்று செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறினார்.

“கட்சிக்கே தலைவர் ஆக முடியவில்லை, ஸ்டாலின் முதல்வர் ஆக ஆசைப்படுகிறார் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளாரே?” என்ற கேள்விக்கு, “அவரைப் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு வரச் சொல்லுங்கள்; நான் பதில் சொல்கிறேன்” என்று கூறினார்.

திமுக கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர என்றும் விரும்பியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon