மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஏ.ஆர்.ரகுமானுக்கு வெள்ளி விழா!

ஏ.ஆர்.ரகுமானுக்கு வெள்ளி விழா!

ஏ.ஆர்.ரகுமானுக்கு வெள்ளி விழா கொண்டாட ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் இந்த ஆண்டு வெள்ளிவிழா காண்கிறார். இதனையடுத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு பிரம்மாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது முதல் படமான ரோஜாவுக்காகத் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, தமிழக அரசு விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமான், இதுவரையில் நான்கு தேசிய விருதுகள், முப்பது ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், கோல்டன் குளோப் விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்தார். இந்திய அரசு, 2010ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரகுமானுக்கு பத்ம பூஷன் விருது வழங்கிக் கௌரவித்தது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் 25 ஆண்டு காலத் திரைப் பயணத்தைப் போற்றும் வகையில் ஆந்திர மாநில அரசு வெள்ளி விழா கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

"காக்கிநாடாவில் அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் பிரமாண்டமான இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறும். இவ்விழாவில் ரகுமானுடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் இசைக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்" என்று ஆந்திர அரசின் மக்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon