மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

நீட்: தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை!

நீட்: தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை!

நீட் நுழைவுத் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சியளிப்பதற்காக அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதி அளவீடாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு எத்தகைய பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்திவிடக் கூடாது என்று அஞ்சினோமா, அத்தகைய பாதிப்புகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகத் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் கல்வி என்பது திறமை சார்ந்தது என்ற நிலை மாறி பணம் சார்ந்தது என்ற நிலை உருவாகியுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நம்ப வைத்துக் கழுத்தை அறுத்ததாலும், இனி நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டதாலும் மருத்துவம் படிக்க விரும்பிய மாணவர், மாணவிகளிடையே தங்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியுமா என்ற ஐயமும் அச்சமும் எழுந்துள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் பள்ளிகளும், தனிப் பயிற்சி நிலையங்களும் கூட்டணி அமைத்து மாணவர்களிடம் கொள்ளை அடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் புகழ்பெற்ற தனிப்பயிற்சி நிறுவனங்களாக விளம்பரப்படுத்தப்படும் டெல்லியைச் சேர்ந்த ஃபிட்ஜீ (FIIT-JEE, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள ஆலென் (ALLEN), மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பினாக்கிள் (PiNNACLE) ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுடனும், சிபிஎஸ்இ பள்ளிகளுடன் கூட்டணி அமைத்து ஐ.ஐ.டி. உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு நாளும் வழக்கமான பாடங்களுடன் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான நுழைவுத்தேர்வு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக் கல்விக் கட்டணமாக ரூ.1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை வசூலிக்கப்படும் நிலையில், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக் கட்டணமாக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.58 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு, ஐஐடி நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு 11ஆம் வகுப்பில் தலா ரூ.1.46 லட்சமும், 12ஆம் வகுப்பில் தலா ரூ.1.52 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. இதனால் மேல்நிலை வகுப்புகளில் கல்விக் கட்டணம், தனிப் பயிற்சிக் கட்டணம் என ஒரு மாணவரிடமும் ரூ.3 லட்சம் வரை பள்ளிகள் வசூலிக்கின்றன.

பள்ளி நிர்வாகங்கள் காட்டும் பாகுபாடு காரணமாக மாணவர்களிடையே கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. இது இன்னும் பல அனிதாக்களை உருவாக்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. மாணவர்களின் திறன் சமச்சீராக அளவிடப்பட வேண்டும் என்பதற்காக நீட் தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, மாணவர்களிடையே சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 85 லட்சம் ஆகும். இவர்களில் குறைந்தபட்சம் 10 லட்சம் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் சராசரியாக தலா ரூ.1 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் வைத்துக்கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மட்டும் நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுகின்றன. இத்தகைய கொள்ளையை ஊக்குவிப்பதற்காகத்தான் நீட்டை மத்திய அரசு கொண்டுவந்ததாக பாமக குற்றஞ்சாட்டி வந்தது. இப்போது அது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளியும் தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும்தான் வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரூ.3 லட்சம்வரை கட்டணம் வசூலிப்பதும், பயிற்சியில் சேராத மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். இதை மத்திய மாநில அரசுகளும், சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் கல்வித்திட்ட இயக்குநரகமும் அனுமதிக்கக் கூடாது. இது குறித்து விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி, இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்துள்ள நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்களிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon