மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

கட்சியே அடமானத்துல கெடக்கு, இதுல பொதுக்குழு? - அப்டேட் குமாரு

கட்சியே அடமானத்துல கெடக்கு, இதுல பொதுக்குழு? - அப்டேட் குமாரு

ஒரு ரத்தத்தின் ரத்தம் அவசர அவசரமா ஃபோன் பண்ணாப்ல. அதெப்படி ஃபோன் அவசரமா எடுத்தாருன்னு கேக்காதீங்க. ஃபோன் எடுத்ததும் அசிங்கமா திட்டி எவ்வளவு நேரமா ரிங்க் அடிக்குதுன்னு கேட்டாப்ல. சரி கோவப்படாதண்ணே என்ன மேட்டர் சொல்லுன்னேன். வழக்கமா கறி விருந்து போட்றவங்க, பொதுக்குழுவுல சைவ சமையல் போட்டுட்டாங்கய்யா. நீ சொன்னது உண்மை தான். முழுசா பா.ஜ.க-வுல சேர்ந்துட்டாய்ங்கன்னு கதறிட்டார். நான் கண் கலங்கி, ஏன்யா நூடுல்ஸு நீ இதையே இப்பத்தான் கண்டுபுடிக்கிறியா? அம்மா வகிச்ச பொதுச்செயலாளர் பதவில யாரும் இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு, அவர் மட்டும் முதலமைச்சரா இருக்காரே, இதெல்லாம் கேக்க ஆளில்லையான்னு கேட்டா, அது சின்னம்மா கொடுத்த பதவி. அதை ராஜினாமா செய்யலைன்னா ஜெயில்ல சசிகலா தூங்காம கஷ்டப்படுவாங்கல்லன்னு சந்தோஷமா கேக்குற வெள்ளந்தி மனசு இருக்குறதாலதான் இப்படிப்பட்ட மக்கள் விரோத நிர்வாகமெல்லாம் இன்னும் தமிழ்நாட்டை பிடிச்சு ஆட்டிக்கிட்டு கெடக்குன்னு சொல்லிட்டு ஃபோன் வெச்சதும், இன்னொரு தம்பி ஃபோன் பண்ணார். அட்டெண்ட் பண்ணிட்டு என்னடா தம்பின்னேன்... ஒன்னு தெரியுமாண்ணே, ஒரு முறை அண்ணன் காரில் போய்க்கொண்டிருந்தபோது... அடேய் உன் தலைவன் ஸ்டைல்ல ஃபோனை வைடான்னு சொல்லிருவேன் ஓடிருன்னுட்டேன். சமூக சேவைக்கு வந்தாலும் வந்தேன், இந்த அரசியல்வாதிகள் தொல்லை தாங்க முடியலப்பா. அப்டேட்டைப் பாருங்க.

ராஜு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் மாலை போட்டேன், இமானுவேல் சேகருக்கும் மாலை போட்டேன், தீரன் சின்னமலைக்கும் மாலை போட்டேன், இப்படி ஒருத்தனை காட்டுங்கடா பாப்போம் - சீமான்

மோடி கூட தான் காந்திக்கும் மாலை போடுறார், சாவர்க்கருக்கும் மாலை போடுறார், அம்பேத்கருக்கும் மாலை போடுறார்.

Madharaa

இந்த ஸ்லீப்பர் செல்ஸ் எல்லாம் எங்கப்பா போனாங்க..?

பேட்டரி தீந்து போச்சாம்..!

Ilanchezhian Rajendran

தமிழ்நாட்ல இந்தியே கிடையாதா இப்ப மட்டும் ஏன் இப்படி எதிர்க்குறிங்க - பாஜக நாராயணன்

எப்பவுமே கொசு தொல்லை இருக்கத்தான் செய்யுது அடிக்கத்தான் செய்யிறோம் ஆனா மலேரியா, டெங்கு பரவும் போது இன்னும் அதிக கவனமா இருக்குறது இல்லையா..அப்படித்தான் #பாஜக/RSS இருக்கும் போது இந்தி திணிப்ப எதிர்க்குறதும்.

Govi Lenin

ஜெயலலிதா வச்சிருந்த பொதுச் செயலாளர் பதவி யாருக்கும் கிடையாது.

ஜெயலலிதா வகித்த முதல்வர் பதவியை நாங்க பங்கு போட்டுக்குவோம்.

இப்படிக்கு, E.P.S-O.P.S c/o B.J.P

Ezhilan M

"நீட்'க்கு எதிராக மத்திய அரசுக்கு கண்டனம்" என்ற ஒரு தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் போட்டு இருக்கலாம் என்றார் நண்பர்.

"புது ஓனர் காறித் துப்ப மாட்டாரா?" என்றேன்

Venkat Ramanujam

முன்னாடி சசிகலா தான் பொது செயலாளர் ன்னு இவுங்களே சொன்னாங்க"..

..சரி..

"அதனால அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில்

சசிகலா எடப்பாடியை 122 MLAs முதல்வராக தேர்வு செய்து கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்"

..சரி..

"இப்போ ஜெயலலிதா இருந்த அமைப்பே தொடரும் சோ நோ பொது செயலாளர்ன்னு சொல்லி சசிகலாவை நீக்குறாங்க "

..சரி..

"அப்போ சசிகலா கொடுத்த எடப்பாடி பரிந்துரை காலாவதி யாகி புது முதல்வர் as per majority MLAs நியமனம் தானே முறை " ..

..எங்ககிட்ட தான் மெஜாரிட்டி இல்லையே..

" அடேய் ப்ளூ வேல் மண்டையாஸ் இது போர்ஜ்ரி டா..என்னய்யா 1063 தனமா இருக்கு "

Viknesh Arasu

அதிமுக தீர்மானங்களை பாஜக வரவேற்கிறது. -இல கணேசன்.

அடேங்கப்பா... இவங்க பாடுறதும்... அவங்க ஆடுறதும்...

இளையராஜா

ஹிந்தி கத்துக்கிட்டா வாழ்க்கையில் முன்னேறலாம் :- SV சேகர்

எங்க திருப்பூருக்கு வந்து பாரு ஹிந்திக்காரனுங்க பொழைக்க தமிழ் கத்துக்கிட்டு இருக்கானுகங்க

Dinesh Kumar Chengai

அதிமுக பொதுக்குழுல இன்னைக்கு சசிகலாவ ப்ளாக் பண்ணிட்டு தினகரன unfriend பண்ணிட்டு புதுசா குரூப் ஆரம்பிக்க போறாங்களாம்!!!

Raja Hussain

ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியை யாரும் வகிக்ககூடாது என்றால். ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில் ஈபிஎஸ்,ஓபிஎஸ்சை பார்க்க எங்களால் முடியவில்லை #டிடிவி_தினகரன்

கரெக்ட்டுதான் சசிகலா நியமித்த எதுவும் செல்லாதுனா EPS நியமனமும் செல்லாதுதானே!!!

Raja Prabhu VK

இவனுங்களே சசிகலா கால்ல விழுந்து பொதுச்செயலாளர் ஆகச் சொல்றாங்க

அப்புறம் இவனுங்களே சசிகலாவ நீக்குறாங்க என்ன எழவு கட்சியா இது...

Sathya Narayanan

கல்லூரி மற்றும் பல்கலைகழக தேர்தல்களில் EVMs வாக்கு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் - ஏபிவிபி

இப்போ தெரியுதா இவனுங்க எப்படி உபில ஜெய்ச்சாங்கனு நாளை தமிழ்நாட்டிலும் EVM மெஷின் முலம் ஆட்சியை பிடிப்பார்கள்

Bhahavath Kumar

அம்மா வகித்த பொதுச்செயலாளர் பதவி இனி யாருக்கும் இல்லை - எடப்பாடி பழனிசாமி

@ அம்மா முதலமைச்ச்ராகவும் இருந்தாங்களே! அப்படின்னா, அந்த CM பதவியையும் ராஜினாமா செய்திரலாமே!

வாசுகி பாஸ்கர்

தலைவர் பிரபாகரனை பார்க்க சீமான் அடர்ந்த வனப்பகுதியில் போய்க் கொண்டிருந்த நேரம், புதர்களுக்கும் செடிகளுக்கும் ஊடே ஜீப் கிழித்து சீறிக்கொண்டிருந்தது.

திடீரென ஜீப்பை நிறுத்த சொன்னார் சீமான். மலைக்கற்கள் நறநறவென்று தேயும் சப்தத்தோடு "சர்ரென்று" நின்றது வாகனம்.

சைகையால் "உஷ்" என்று காட்டிவிட்டு, மெதுவாக தன் இடுப்பில் சொருகியிருந்த ரிவால்வரை எடுத்தார். வன விலங்கோ, அல்லது சிங்களவர்களாக இருக்கக்கூடும் என்கிற அச்சத்தில் ஜீப்பில் இருந்தவர்களும் துப்பாக்கியை வெளியே எடுக்க, "நான் பார்த்துக்கொள்கிறேன், உள்ளே வையுங்கள்" என்று சமிஞ்சை செய்தார் சீமான்.

ராக்கட் வேகத்தில் ஒரு செடியை நோக்கி சுட்டார்.

மயான அமைதி, "ஹே ஹே ஹே" என்று சிரித்தார், "போகலாம்" என்றார்,

தோழர்கள் "என்னன்னே சுட்டிங்க, அங்க எதுவுமே இல்லையேன்னு" கேட்டார்கள்,

மெல்லமாக சிரித்தார் சீமான் "அது என்ன பூ?" என்று கேட்டார்

"ஜாதிப்பூ"

"பூவுல கூட ஜாதி இருக்க கூடாது, கிளம்பலாம்" என்றார்

டயர் மூன்று சுற்று சுற்றி செம்மண்ணை பீச்சி அடிக்க காட்டுக்குள் ஓடி மறைந்தது.

அப்டேட் குமாரு

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.

ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.

நீண்ட நாட்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.

இதனால் பாட்டியின் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.

வீட்டிற்கு வந்தவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? என்ற குழப்பம் உண்டாகியது..

எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.

மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.

கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்.

நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..

பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து அனுப்பினார்.

தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.

தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..

மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.

கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..

கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.

கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..

நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..

ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..

அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.

அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்..

என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..

ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..

மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..

மாநில அமைச்சரிடம் இருந்து

மாவட்ட கலெக்டருக்கு வந்து..

மாவட்ட கலெக்டரிடமிருந்து

தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து

விஏஓக்கு வந்து..

விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.

-லாக் ஆஃப்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon