மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

நவோதயா பள்ளிகளை உடனே தொடங்குங்கள் : திருநாவுக்கரசர்

நவோதயா பள்ளிகளை உடனே தொடங்குங்கள் : திருநாவுக்கரசர்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக 8 வாரங்களில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டது. நவோதயா மூலம் இந்தி திணிப்புக்கு முயற்சி செய்யப்படுகிறது என்று, தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நவோதயா பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று ( செப்டம்பர் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில்,'நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நவோதயா பள்ளிகளுக்கான தடையில்லா சான்றை எட்டு வாரங்களுக்குள் தமிழகஅரசு வழங்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

நவோதயா பள்ளிகளை கிராமப்புறங்களில் தொடங்க வேண்டுமென்று பிரதமர் ராஜீவ்காந்தி எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவாக 1986 ஆம் ஆண்டில் புதிய கல்வி கொள்கையில் இதற்கான பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுகிறது என்கிற கருத்தின் அடிப்படையில் மாநில அரசு அனுமதி வழங்காமல் மறுத்து வருகிறது.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மும்மொழி திட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது. இதை அனுமதிக்கிற தமிழக அரசு, நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மறுப்பது ஏன் ? ஏன் இந்த பாரபட்சம் ? தேவையற்ற மொழி சர்ச்சையை ஏற்படுத்தாமல் நவோதயா பள்ளிகள் குறித்து தெளிவான பார்வை இருந்தால் எவரும் இதை எதிர்க்க மாட்டார்கள். எனவே மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon