மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

முதுமை: 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!

முதுமை: 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!

85 வயதான முதியவர் ஒருவர் ஏழ்மையிலும் 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டு இயற்கையின் காவலராய் இருந்துவருகிறார்.

அரியலூரை அடுத்த கள்ளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு தற்போது 85 வயது. இவர் சுமார் 20 ஆண்டுகளாகக் கோவில்கள், பொது இடங்கள் எனப் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுப் பசுமைக் காப்பாளராகத் திகழ்ந்துவருகிறார்.

வர்தா புயலில் இழந்த மரங்களை மீட்கும் வகையில் சமீப காலமாக அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் மர வளர்ப்பில் ஆர்வம் காட்டிவருகின்றன. ஆனால் எதிர்காலத்தில் மரங்களின் சேவை நமக்குத் தேவை என்பதை உணர்ந்த கருப்பையா சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், மழைப் பொழிவை அதிகரிக்கவும் பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டுவருவது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.

கருப்பையா இதுவரை சுமார் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள ஆட்சியர் அலுவலகம், பள்ளிகள், சாலையோரங்கள், கோவில் வளாகம் எனப் பல இடங்களில் பல வகையான மரக்கன்றுகளை நட்டு, சமூகப் பணியாற்றிவருகிறார். தினமும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஒரு மஞ்சள் பையில் மரக்கன்றுகளுடன் கிளம்பிவிடுவார். ஏதாவது ஒரு இடத்தில் மரக்கன்றுகளை நட்டு அங்குள்ள மக்களிடம் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்குமாறு சொல்லிவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

எந்த ஊருக்குச் சென்றாலும் மதியம் வீட்டுக்கு வந்து, தான் வளர்த்துவரும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வாராம். பொது இடங்களில் மரம் வளர்ப்பது மட்டுமின்றி தன் வீட்டுத் தோட்டத்தில் வேம்பு, புங்கன், வாகை, பூவரசு, புளியங்கன்று எனப் பல வகையான மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்துவருகிறார்.

“மனிதன் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்காமல் சமூகத்தின் மீது அக்கறையுடன் வாழ வேண்டும். சமூகத்திற்கு என்னால் முடிந்த நன்மையை செய்ய வேண்டும் என்பதால் எதையும் எதிர் பார்க்காமல் 20 ஆண்டுகளாக மரம் வளர்த்துவருகிறேன். மர வளர்ப்பில் இன்று காட்டும் அக்கறையை, 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசும் மக்களும் காட்டியிருந்தால், இன்று தமிழகம் வறட்சியிலிருந்து மீண்டிருக்கும். சாகும் வரை இந்தப் பணியைச் செய்வேன். இதற்காக யாரிடமும் ஒரு பைசா வாங்க மாட்டேன். அப்படி வாங்குவது கூலிக்கு வேலை செய்வது போலாகும். நான் நட்ட மரக்கன்றுகள் இன்று மரங்களாக வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் கருப்பையா.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon