மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

மைனாரிட்டி அரசைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு!

மைனாரிட்டி அரசைத் தாங்கிப் பிடிக்கும்  மத்திய அரசு!

அதிமுக அணிகளின் பொதுக்குழு பற்றிய செய்திகளே சேனல்களை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (செப்டம்பர் 12) செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், ‘மைனாரிட்டி எடப்பாடி அரசை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செயற்குழு தீர்மானம் பற்றி அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...

“நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராடுகின்றனர், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் போராடுகின்றனர். ஆனால், இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் எடப்பாடி தலைமையிலான அரசு தங்களைப் பாதுகாத்துக்கொள்வதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் தக்கவைத்துக்கொள்வதற்கு ஏராளமான பணம் புரள்வதாக வரும் செய்திகள் தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்துவந்த ஆதரவினைத் தாங்கள் விலக்கிக்கொள்வதாக 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்துவிட்ட நிலையில் இந்த அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததாகும்.

எனவே சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக எதிர்கட்சிகள் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆளுநர் அவர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதே கோரிக்கைகளை வற்புறுத்தி எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கப்பட்டு பல நாட்கள் கடந்த பின்னரும், ஆளுநரும், குடியரசுத் தலைவரும் தனது சட்டரீதியான கடமையினை நிறைவேற்ற தவறி வருகின்றனர்.

மைனாரிட்டி அரசாக இருப்பினும் இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு அக்கறையுடன் உள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது. பெரும்பான்மையை இழந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமியின் அரசினை தாங்கிப்பிடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது’’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மக்கள் பிரச்சனைகளைப் புறந்தள்ளி, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிவரும் மக்கள் மீது அடக்குமுறையினை ஏவிவிட்டுள்ள மைனாரிட்டி எடப்படி பழனிச்சாமி அரசு இனியும் நீடிப்பதற்கு துளியும் அருகதையில்லை’’ என்றும் கூறியுள்ளார் ஜி.ராமகிருஷ்ணன்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon