மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ப்ளூவேல் கேமைத் தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

ப்ளூவேல் கேமைத் தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

ப்ளூ வேல் விளையாட்டை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ப்ளூ வேல் விளையாட்டின் தாக்கம் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இதனை விளையாடிப் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஏழாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். ஆகஸ்ட் 30ஆம் தேதி மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ப்ளூ வேல் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடியதால் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி ப்ளு வேல் விளையாட்டைத் தடை செய்யச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. அப்போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி ப்ளு வேல் விளையாட்டைத் தடை செய்யத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தது.

இவ்வழக்கு விசாரணை இன்று (செப். 12) நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்னிலையில் வந்த போது ப்ளூ வேல் விளையாட்டைத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும், இந்த விளையாட்டால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரஷ்ய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தடை செய்யவேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து பள்ளி, உயர் கல்வித் துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதுபோன்று ப்ளூ வேல் விளையாட்டைத் தடை செய்ய மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பொன்னையா தொடர்ந்த மனு செப்.15ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon