மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

அறுவை சிகிச்சையின்போது கேம் விளையாடிய சிறுமி!

அறுவை சிகிச்சையின்போது கேம் விளையாடிய சிறுமி!

சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் மூளை அறுவை சிகிச்சையின்போது கேன்டி கிராஷ் விளையாடியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

5ஆம் வகுப்பு படிக்கும் நந்தினி(10) என்னும் சிறுமி வலிப்பு காரணமாக சென்னையில் உள்ள சிம்ஸ் (SIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது மூளையின் முக்கியமான பகுதியில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் முகம், கை மற்றும் கால் உட்பட உடலின் இடது பக்கம் செயலிழந்து போய்விடும். மூளையில் உள்ள கட்டி வளர்ந்தால், அது பக்கவாதத்தை ஏற்படுத்தலாம் அல்லது உயிரிழப்பு ஏற்படும் என சிம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் ரூபேஷ் குமார் பெற்றோரை எச்சரித்தார்.

பொதுவாக க்ரானியோட்டோமி எனப்படும் அறுவைசிகிச்சை செய்யும் போது நோயாளி மயக்கத்தில் இருப்பார். கட்டியை நீக்க இந்த வழக்கமான அறுவை சிகிச்சை முறையை நான் செய்யப்போவதில்லை. ஏனெனில், மூளையின் உணர் திறனுள்ள பகுதியில் அறுவை சிகிச்சை செய்யும் பகுதி , தற்செயலாக ஒரு தவறான நரம்பைத் தொட்டால் கூட அது உடலின் இடது பக்கத்தை முடக்கும் அபாயம் உள்ளது. எனவே, நோயாளி விழித்திருக்கும் போதே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நோயாளி விழித்திருந்தாலும் அவருக்கு வலி ஏற்படாது என கூறியுள்ளார்.

ஆனால், குழந்தையின் பெற்றோர் முதலில் இதற்கு சம்மதிக்கவில்லை. புதுச்சேரியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் குழந்தையின் மாமாவிடம் கருத்து கேட்ட பின்பு அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தனர். அறுவைசிகிச்சைக்குப் பிறகான மன அழுத்தம் குறித்து கவலையாக இருப்பதாகப் அவர்கள் மருத்துவரிடம் கூறியுள்ளனர். இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் நலமுடன் இருப்பார்கள் என மருத்துவ இலக்கியத்தில் உள்ள ஆய்வுகள் காட்டுகிறது என நரம்பியல் மயக்க மருந்து மருத்துவர் சுதாகர் சுப்ரமணியம் பெற்றோரை சமாதானப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து, சிறுமிக்குக் கடந்த புதன்கிழமை (செப்டம்பர், 6) மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், ‘மூளையில் கட்டி இருக்கும் 2% நோயாளிகளுக்கு மட்டுமே இதுவரை விழித்திருக்கும்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இந்த அறுவை சிகிச்சை முறை பெரியவர்களுக்கு தான் பரிந்துரைக்கப்படும். ஆனால் இந்த குழந்தையின் விஷயத்தில் சாதாரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. எனவே இந்த முறையைத் தேர்ந்தெடுத்தோம். நாங்கள் அறுவை சிகிச்சை செய்யும்போது கை கால்களை அசைத்தவாறு சிறுமி கேன்டி கிராஷ் விளையாடிக்கொண்டிருந்தார். பெரியவர்கள் பயந்தபோதிலும் சிறுமி தைரியமாக இருந்தார்” எனக் கூறினர்.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தனக்கு பிடித்தமான பரத நாட்டியத்தை சில நாட்களில் தொடரவுள்ளதாக சிறுமி நந்தினி மருத்துவர்களிடம் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (செப்டெம்பர், 8) அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon