மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஜியோவிற்குப் போட்டியாக ஏர்டெல்!

ஜியோவிற்குப் போட்டியாக ஏர்டெல்!

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் வோல்ட்-இ சேவைகளை தற்போது சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், வோல்ட்-இ சேவைகளை விரைவில் துவங்க இருப்பதாகவும், இதன்கீழ் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

4ஜி டேட்டா நெட்வொர்க்கினால், வோல்ட்-இ சேவைகளைக் கொண்டு வாய்ஸ் கால்கள் இலவசமாக வழங்க முடியும். ஜியோவிற்கு அடுத்தபடியாக, வோல்ட்-இ சேவைகளை வழங்கும் இரண்டாவது நிறுவனம் ஏர்டெல் ஆகும்.

புதிய தொழில்நுட்பமாக இருப்பினும் இந்தியாவில் வோல்ட்-இ மிகக் குறைந்த காலகட்டத்தில் அதிகம் பிரபலமாகியுள்ளது. ஜியோ வரவுதான் இதற்கு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன் சேவைகளைத் துவங்கிய ஜியோ, வழக்கமான ஜிஎஸ்எம் நெட்வொர்க்கைத் தவிர்த்து 4ஜி டேட்டாவைப் பயன்படுத்தி வாய்ஸ் கால்களை வழங்கியது. இதனைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால்களை ஜியோ வழங்கிவருகிறது. ஜியோ பயன்படுத்திவரும் வோல்ட்-இ தொழில்நுட்பம் இல்லாத நிலையில், ஏர்டெல் மற்றும் இதர போட்டி நிறுவனங்கள் ஜியோ போட்டியை சமாளிக்க முடியாமல் விலை குறைப்பு அறிவித்ததுடன் பழைய விலையில் அதிக சலுகைகளை வழங்கின.

முதல் கட்டமாக மும்பை, கொல்கத்தா நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்-இ சேவைகளைத் தங்களது போன்களில் ஆக்டிவேட் செய்யும் குறுந்தகவல்கள் அனுப்பப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வோல்ட்-இ சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் பிரத்தியேக மென்பொருள் மற்றும் வன்பொருள் சப்போர்ட் இருக்க வேண்டும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏர்டெல் நிறுவனமும் ஜியோபோன் போன்ற வசதிகள் நிறைந்த 4ஜி ஃபீச்சர் போன் ஒன்றை வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது. வோல்ட்-இ அழைப்புகளை மேற்கொள்ள உதவும் ஃபீச்சர் போன்களைத் தயாரிக்க ஏர்டெல் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் அல்லது இன்டெக்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon