மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றிய பெண்கள்!

தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றிய பெண்கள்!

குடும்பஸ்ரீ திட்டத்தின் ஒரு பகுதியாகப் பெண்கள் தரிசு நிலத்தில் நெல் பயிரிட்டு முதல் அறுவடையிலேயே வெற்றியைக் கண்டுள்ளனர்.

பெண்கள் அதிகாரத்தை மேம்படுத்தி வறுமையை ஒழிக்கும் திட்டமாக குடும்பஸ்ரீ திட்டம் 1998ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இன்று, உலக அளவில் பெண்களை மேம்படுத்தும் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாகவும், கேரளப் பெண்களுக்குத் திருப்புமுனையாகவும் இத்திட்டம் அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்கள் தரிசு நிலத்தைச் செம்மைப்படுத்தி அதில் வெற்றிகரமாகப் பயிரை அறுவடை செய்துள்ளனர். கேரளாவில் கொல்லம் பகுதியில் அஞ்சல் ஊராட்சியில் உள்ள ஈரம் பகுதியில் இரண்டு ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நிலம் நாளடைவில் தரிசு நிலமாக மாறியது.

இதுபோன்ற தரிசு நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுவரும் நிலையில் பிஸ்மில்லா, பூங்காவனம் உட்பட குடும்பஸ்ரீ திட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இந்நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிடத் தொடங்கினர். வறண்ட இந்நிலத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளனர். அதில் நெற் பயிரிட்டு நூறு சதவிகிதம் லாபம் ஈட்டியுள்ளனர். கேரளா மாநில முந்திரி அபிவிருத்தி கார்ப்பரேஷன் தலைவர் எஸ்.ஜெயமோகன் அறுவடையைத் தொடங்கிவைத்தார்.

எனவே விவசாயிகள் தினத்தன்று கொல்லம் மாவட்டத்திலுள்ள அஞ்சல் என்னும் பகுதியில் அமைந்திருக்கும் கிருஷி பவனில் இந்தப் பெண் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர். நெல் பயிரிட்டு லாபத்தைச் சம்பாதித்ததைவிட, தரிசு நிலத்தைப் பசுமையாக மாற்றியதை நினைத்து நாங்கள் திருப்தி அடைகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon