மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

வளர்ச்சிக்கு மீண்ட மருந்துத் துறை!

வளர்ச்சிக்கு மீண்ட மருந்துத் துறை!

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டுள்ள மருந்துத் துறை ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையை ஏற்படுத்தும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஜூலை மாதம் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் மாற்றியமைக்கப்பட்டன. உயிர் காக்கும் மருந்துகளுக்கு 12 சதவிகித வரியும், பட்டியலிடப்பட்ட, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளுக்கு 7 சதவிகித வரியும், அனாசின், சாரிடர், விக்ஸ் போன்ற மருந்துகளுக்கு 5 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜி.எஸ்.டி. அமலான ஜூலை மாதத்தில் மருந்து விற்பனையில் சிறிது மந்த நிலை ஏற்பட்டது. எனினும், ஆகஸ்ட் மாதத்தில் மருந்து விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

சந்தை ஆய்வு நிறுவனமான AIOCD - AWACS வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதத்தில் தோல் வியாதிக்கான மருந்து விற்பனை 12.7 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல, இரைப்பை சம்பந்தமான பிரச்சினைகளுக்கான மருந்து விற்பனை 2.4 சதவிகிதமும், வைட்டமின் மாத்திரைகள் 1.8 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளன. நீரிழிவு நோய்க்கான மருந்து விற்பனையும் 10.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேலும், இதய நோய்க்கான மருந்து விற்பனை 8.1 சதவிகிதமும், சி.என்.எஸ். மருந்து விற்பனை 5.6 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலேயே மருந்து விற்பனையில் Zydus Cadila நிறுவனம் 15.7 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து Mankind Pharma நிறுவனம் 11.1 சதவிகித வளர்ச்சியையும், Lupin நிறுவனம் 8.9 சதவிகித வளர்ச்சியையும் பதிவுசெய்துள்ளன.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon