மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

லாரன்ஸ் சர்ச்சை!

லாரன்ஸ் சர்ச்சை!

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது `முனி 4' படத்தை ஆரம்பிக்க உள்ளதால் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்தவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் பா.ஜ.க அரசை விமர்சித்தது போன்று செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் லாரன்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தயவு செய்து அரசியலாக்காதீர்கள் என ஆரம்பித்து, "நேற்று எனது முனி 4 படத்திற்குப் பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள். சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள். கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன். நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள். நானும் "காலம் பதில் சொல்லும்" என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன். ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.கா வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள். சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம். அரசியல் அல்ல. அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா என்றும் கேட்டார்கள். அது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இது போன்று நம்பகமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்னும் கருத்தாக, "தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்" எனப் பதிவிட்டதோடு அந்த பேட்டியின் நம்பகமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon