மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

வில்வித்தையில் சிறுமி சாதனை!

வில்வித்தையில் சிறுமி சாதனை!

ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வில்வித்தையில் புதிய சாதனை படைத்துள்ளார். 20 மீட்டர் போட்டியில் எளிதாக 290 புள்ளிகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள செருகேரியைச் சேர்ந்தவர் டாலி ஷிவானி (5). இவரின் தந்தை சத்யநாராயணன். இவர் வோல்கா வில்வித்தை பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஷிவானியின் அண்ணன் லெனின், சர்வதேச வில்வித்தை வீரர். 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு நிகழ்ந்த சாலை விபத்தில் இவர் மரணமடைந்தார். தன் அண்ணனின் வழியில் ஷிவானியும் வில்வித்தையில் சாதனை படைத்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) 10 மீட்டர் தூரத்தில் இருந்து 11 நிமிடம் 19 நொடிகளில் 103 அம்புகளை இலக்கை நோக்கி செலுத்தி புதிய சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து 20 மீட்டர் தூரத்தில் இருந்து 5 நிமிடம் 8 நொடிகளில் 36 அம்புகளை இலக்கை நோக்கி செலுத்தி 360 புள்ளிகளுக்கு 290 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சாதனையைப் படைத்தார்.

20 மீட்டர் போட்டியில் 250 புள்ளிகள் பெறுவதே மிகவும் கடினமானது. ஆனால், ஷிவானி எளிதாக 290 புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஷிவானிக்குப் பயிற்சி அளித்த வோல்கா வில்வித்தை நிறுவனத்தின் முயற்சியைப் பாராட்டுகிறோம் என இந்திய வில்வித்தை சங்கத்தின் அதிகாரி பி.ஷ்ரவன் குமார் கூறியுள்ளார்.

ஷிவானியின் தந்தை செருகேரி சத்யநாராயணனிடம் சாதனை படைத்ததற்கான சான்றிதழ்களை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

குரியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஷிவானியின் இந்தச் சாதனைக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

2024 ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வெல்வதே ஷிவானியின் லட்சியம். அதற்காகவேத் ஷிவானியை தயார் செய்து வருகிறோம் என அவர் தந்தை தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு, 5 மீட்டர் முதல் 7 மீட்டர் வரையிலான தூரத்தில் 36 ஏரோ ஷாட்டுகளில் 388 புள்ளிகளை பெற்று புதிய சாதனையைப் படைத்தவர் ஷிவானி. அப்போது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதி விஷ்வாஜிர் ரே மற்றும் இந்திய விளையாட்டு ஆணைய பிரதிநிதி ராம கிருஷ்ணா அந்தச் சாதனையை உறுதி செய்து சான்றிதழ் வழங்கினர்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon