மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

கட்சியைக் கைப்பற்றியதா எடப்பாடி - பன்னீர் அணி?

கட்சியைக் கைப்பற்றியதா எடப்பாடி - பன்னீர் அணி?

சசிகலா நியமனம் ரத்து

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து இன்று (செப்டம்பர் 12) காலை 11 மணிக்குச் சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக அம்மா, புரட்சித் தலைவி அம்மா அணிகளின் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. இதில் சசிகலாவை ப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்றி, ஜெயலலிதாவே நிரந்தரப் பொதுச் செயலாளர் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பொதுக்குழுவுக்காகக் கடந்த சில நாட்களாகவே வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்தன. இன்று காலை முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் திருமண மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். காலை 11 மணியளவில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கிய பொதுக்குழுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் அஞ்சலி செலுத்தினார். பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி,வேலுமணி, உள்ளிட்ட அமைச்சர்களும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

முதலில் வரவேற்புரையாற்றிய பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, “ஜெயலலிதா இந்தக் கட்சியைக் காப்பாற்ற, ஆட்சியைக் காப்பாற்ற என்ன பாடுபட்டார் என்று தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே ஆட்சியைக் கவிழ்க்க நினைப்போருக்குத் தக்க பாடம் புகட்டப்படும்” என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து தீர்மானங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். “அனைவரும் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலிதாதான். மறைந்த ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப இயலாது. எனவே இனி அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பே கிடையாது. முன்பு நடைபெற்ற இணைப்பு விழாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். இதில் பொதுச் செயலாளருக்கு வழங்கப்படும் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படும், அதாவது அனைத்து அதிகாரங்களும் தற்போது பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அதிகாரங்களும் பன்னீர்செல்வம், எடப்பாடி இருவருக்கும் வழங்கப்படும். கட்சியின் சட்ட விதி 19 திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. எனவே அவரால் நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனமும் ரத்தாகிறது. அவரது அறிவிப்புகள் எதுவும் கட்சியின் விதிகளுக்குட்பட்டது அல்ல, எனவே அவை செல்லாது.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனங்களே செல்லும். அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே பொறுப்புகளில் தொடர்வர்’’ என்பதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடுவதற்குப் பாராட்டுத் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. தினகரனின் ஆதரவாளராக கருதப்படும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரமும் இந்தப் பொதுக்குழுவில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

சுமார் 45 நிமிடங்கள் அமைச்சர் உதயகுமார் தீர்மானங்களை வாசித்து முடித்து அவற்றை நிறைவேற்றிய பிறகு, மற்ற நிர்வாகிகள் பேசத் தொடங்கினர்.

ஜெயலலிதா இருக்கும்போது கூட்டப்படும் பொதுக்குழுக் கூட்டங்களின்போது பொதுக்குழு உறுப்பினர்களைத் தாண்டி ஏராளமான தொண்டர்கள் மண்டபத்தின் வெளியே குழுமியிருப்பார்கள். ஆனால் இந்த பொதுக்குழுவில் அந்த அளவுக்குத் தொண்டர்களைக் காண முடியவில்லை என்பதே உண்மை. காரணம் பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டிவருவதிலேயே அமைச்சர்கள், மா.செ.க்களின் முழு கவனமும் இருந்ததால் தொண்டர்களைத் திரட்டுவது பற்றி அவர்கள் கவலைப்பட நேரமில்லை.

இந்தப் பொதுக்குழுவின் மூலம் எடப்பாடியும், ஓ. பன்னீரும் இணைந்து கட்சியைக் கைப்பற்றிவிட்டார்கள் என்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. இதன் பிறகு தினகரனின் வேகம் அதிகரிக்கும் என்பதே இப்போதைய அதிமுகவின் தட்பவெப்பம்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon