மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

கூட்டப்பட்டது பொதுக்குழுவே அல்ல: தினகரன்

கூட்டப்பட்டது பொதுக்குழுவே அல்ல: தினகரன்

சென்னையில் தற்போது கூடியிருப்பது பொதுக்குழு அல்ல வெறும் கூட்டம் மட்டுமே என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அணிகள் ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து, இரு அணிகளின் சார்பில் இன்று (செப்டம்பர் 12) பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால்,திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறுவது உறுதியாகியது. இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு தொடங்கியது.

இந்தப் பொதுக்குழுவில் சசிகலாவின் பதவி, அதிகாரம் பறிப்பு, இரட்டை இலைச் சின்னம் மீட்பு உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில், அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப்டம்பர் 12) மதுரையில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். சென்னையில் தற்போது கூடியிருப்பது பொதுக்குழு அல்ல. வெறும் கூட்டம் மட்டுமே. பொதுச்செயலருக்குப் பதில் நான்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். பழனிசாமியின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

எடப்பாடி ஆட்சியைக் கலைக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்கான நடவடிக்கையில் இனி ஈடுபடுவோம். ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உட்காருவதைத் தொண்டர்கள் விரும்பவில்லை. அவர்களுக்குத் தேர்தலை சந்திக்கப் பயம். மீண்டும் தேர்தல் வந்தால் இவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது. தேர்தல் வந்தால் எங்களுக்கும் திமுக-வுக்கும்தான் போட்டியே.

பழனிச்சாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம். துரோகமும் துரோகமும் இணைந்து கூட்டணி வைத்து ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியைத் தொண்டர்கள் விரும்பவில்லை. பதவி சுகம் அனுபவித்துவிட்டுக் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றனர். 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாதபோது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்யவேண்டும். தைரியமிருந்தால் மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி நிரூபியுங்கள்.

எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுத்ததால் விருப்பமில்லாமல், அமைச்சர் தங்கமணி,வேலுமணி, வீரமணி,பெஞ்சமின் மற்றும் சில எம்.எல்.ஏ.க்களை அழைத்துக்கொண்டு வெளியேறுவதாக இருந்தனர். இதையெல்லாம் தடுத்து நிறுத்தியது நாங்கள்தான்.எம்.எல்.ஏ. செம்மலை அவர்கள் எடப்பாடியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லித்தான் சென்றார்.

தன்னை முதல்வர் பதவிக்குக் கொண்டு வந்த சசிகலாவுக்கே துரோகம் செய்கிறார்களே அவர்கள் எப்படி தமிழக மக்களுக்கு நன்மை செய்வார்கள். இதைத்தான் என்னைச் சந்திக்கும் மக்களும், கழகத்தினரும் கேட்கிறார்கள். அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் செல்லுமா செல்லாதா என்பதை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்.”

இவ்வாறு தினகரன் கூறினார். ஆளுநர் இன்னும் 2 நாட்களில் முடிவெடுப்பார் என்று நம்புகிறேன். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon