மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஜாக்டோ - ஜியோ அமைப்பு நேரில் ஆஜராக உத்தரவு!

ஜாக்டோ - ஜியோ அமைப்பு நேரில் ஆஜராக உத்தரவு!

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ, ‘புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வந்தனர்.

அரசு அலுவலகங்கள் மூடியுள்ளதால் பொதுமக்களும், ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சேகரன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கைக் கடந்த 7ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் போராட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (செப். 11) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இரண்டாம் நாளான இன்றும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர்களுடன் சேர்ந்து கல்லூரி ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க (ஏ.யு.டி.) தலைவர் ஜெ.காந்திராஜ் தெரிவித்தார். இதனிடையே தடையை மீறிப் போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சேகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளிடம் மேல் முறையீடு செய்தார். இதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்தது.

இந்நிலையில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்னிலையில் இன்று (செப். 12) அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், மோசஸ் தாமஸ் உட்பட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் வெள்ளிக்கிழமை (செப். 15) நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon