மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

வெற்றிவேலை நீக்குவோம்: மதுசூதனன்

வெற்றிவேலை நீக்குவோம்: மதுசூதனன்

அ.தி.மு.க. பொதுக்குழுவை எதிர்த்து வழக்குத் தொடுத்த வெற்றிவேல் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்குவோம் என்று அதிமுகவின் அவைத் தலைவரான மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றிவேல் பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு போட்டிருக்கிறார். அதன் மீது நேற்று இரவு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘பொதுக்குழு நடத்தத் தடையில்லை. ஆனால், பொதுக்குழு எடுக்கும் முடிவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது’’ என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில் பொதுக்குழு தொடங்கும் முன் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ’’பொதுக்குழுவுக்கு தடை கேட்ட அதிமுக எம்.எல்.ஏ.வும் தினகரன் ஆதரவாளருமான வெற்றிவேல் காங்கிரசில் இருந்து அ.தி.மு.க.வுக்கு கட்சி மாறி வந்தவர். காங்கிரசில் இருந்து வந்ததால் அந்த கட்சியின் கலாசாரத்தை (கோஷ்டி பூசல்) அ.தி.மு.க.விலும் உருவாக்கி வருகிறார்.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை எந்த தனி மனிதனாலும் அழிக்க முடியாது. இது அம்மாவால் பலமான கோட்டையாக திகழ்கிறது. அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு போட்டதற்காக வெற்றிவேல் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்’’ என்று தெரிவித்தார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon