மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

குழப்பத்தைத் தீர்த்த கீர்த்தி சுரேஷ்

குழப்பத்தைத் தீர்த்த கீர்த்தி சுரேஷ்

சில நாட்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் தன் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ரசிகர்கள் மத்தியில் அந்தப் புகைப்படம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

சூர்யாவுடன் இணைந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் இரண்டு தெலுங்கு படங்கள் என பிசியாக நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் குறைந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகும் அளவிற்கு வளர்ந்துள்ளார். தமிழைத் தாண்டி மலையாளம், தெலுங்கு எனத் தென்னிந்திய சினிமாவில் வெற்றிகரமாக தன் பெயரைப் பதிவு செய்துவிட்டார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் நிலவும் புகைப்பட குழப்பத்தைத் தீர்த்துள்ளார் கீர்த்தி. தற்போது துல்கர் சல்மானுடன் சேர்ந்து ‘நடிகையர் திலகம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இதில் சமந்தா, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த விஜய் தேவரகொன்டா, பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இந்தப் படத்தின் புகைப்படம் என்று நினைத்து ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனை தெளிவுபடுத்தும் விதத்தில் கீர்த்தி அந்தப் புகைப்படம் ‘சென்னை சில்க்ஸ்’ விளம்பரத்துக்காக எடுத்தது என்றும் ‘நடிகையர் திலகம்’ புகைப்படங்களை விரைவில் வெளியிடுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்திற்குத் தெலுங்கில் ‘மஹாநதி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon