மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

கடன் தள்ளுபடியால் உயரும் பணவீக்கம்!

கடன் தள்ளுபடியால் உயரும் பணவீக்கம்!

விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதால் நாட்டின் பணவீக்க விகிதம் 0.2 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதித்து தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அவ்வப்போது மத்திய அரசாலும் மாநில அரசுகளாலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறுகிய கால அளவில் தாக்கம் ஏற்படும்.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிப்பீடுகளை வைத்துப் பார்க்கும்போது 2017-18 நிதியாண்டில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் கடன் தள்ளுபடிக்கான தொகையை வெளியிடும். கிட்டத்தட்ட ரூ.88,000 கோடி வரையில் கடன் தள்ளுபடி இருக்கும். இதுபோல கடன் தள்ளுபடி அறிவிப்புகள் சந்தையில் பங்குதாரர்களிடையே நிச்சயமற்றதன்மையை உருவாக்கும். இதனால் பணவீக்க விகிதம் அதிகரிக்கக்கூடும். கடன் தள்ளுபடி அறிவிப்பால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 0.40 சதவிகிதம் அதிகரிக்கும். இதனால் பணவீக்க விகிதம் 0.20 சதவிகிதம் உயரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசமும், 2016ஆம் ஆண்டில் தமிழகமும், நடப்பு ஆண்டில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களும் கடன் தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon