மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ப்ளூ வேல்: சிற்பக் கலைஞர் சுதர்சன் வேண்டுகோள்!

ப்ளூ வேல்: சிற்பக் கலைஞர் சுதர்சன் வேண்டுகோள்!

ப்ளூ வேல் விளையாட்டால் உலகம் முழுவதும் இளைஞர்கள் உயிரிழந்துவருகின்றனர். சமீபத்தில் இந்தியாவுக்குள் நுழைந்த ப்ளூ வேல் விளையாட்டால் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா , உத்தரப் பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் இளைஞர்களும், மாணவர்களும் உயிரிழந்துவருவது அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் தொடங்கிய ப்ளூ வேல் விளையாட்டால் கடந்த மாதம் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். விக்னேஷ் தற்கொலைக் கடிதத்தில், “நீல திமிங்கலம் இது விளையாட்டு அல்ல விபரீதம்! ஒரு முறை உள்ளே போனால் வெளியே வர முடியாது!” எனக் குறிப்பிட்டிருந்தார். ஒரே நெட்வொர்க்கில் உள்ள 75 மாணவர்கள் ப்ளூ கேம் விளையாடிவருவதாக விக்னேஷின் தாய் தெரிவித்தார்.

லக்னோ பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட் போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த விளையாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ப்ளூ வேல் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதா்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

நேற்று (செப்டம்பர், 11) ஒடிஷா மாநிலத்தில் உள்ள புரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார். அதில் ப்ளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகித் தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகள் மீட்கப்பட வேண்டும், இளைஞர்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில் ரக்‌ஷா பந்தனுக்கு ஹெல்மெட்டை பரிசாக அளித்துக் கொண்டாடுவோம் என சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon