மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

நவோதயா மூலம் இந்தித் திணிப்பா ?

நவோதயா மூலம் இந்தித் திணிப்பா ?

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக 8 வாரங்களில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டது.

இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் இதுகுறித்து இன்று (செப்டம்பர் 12) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,"தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர வேண்டும்,எட்டு வாரங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதுடன், நவோதயா பள்ளிகள் அமைக்கத் தேவையான உள் கட்டமைப்புகளை அமைத்துத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி என்ற அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 598 இடங்களில் ஜவஹர் வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதில் இந்தி மொழி கட்டாயமாகவும், அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்திற்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்க பாடங்கள் போன்றவை இந்தியிலும் கற்றுத்தரப்படுகின்றன. நவோதயா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் 1986ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி அளிக்கப்படவில்லை.

பாஜக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தி மொழியை பல வகைகளில் திணிக்கவும், சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தை புகுத்தவும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை திணிக்க தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து, கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

ஏற்றத் தாழ்வுகள் அற்ற கல்வியை வழங்குதற்கு பொதுப்பள்ளிகளை மேம்படுத்துவதுதான் சால சிறந்தது ஆகும். நவோதயா பள்ளிகளுக்கு ஏற்படும் செலவினைப் பொதுப்பள்ளிகளை மேம்படுத்தவும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தினால் கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகளுக்கு பயனளிப்பதாக இருக்கும்.

தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பது கொள்கை முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன்வர வேண்டும்.டெல்லி பாஜக அரசின் இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி அரசு பலியாகிவிடக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon