மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

கௌரி லங்கேஷ்: சென்னை பத்திரிக்கையாளர்கள் கண்டனம்!

கௌரி லங்கேஷ்: சென்னை பத்திரிக்கையாளர்கள் கண்டனம்!

கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் செப்.5ம் தேதி மர்ம நபர்களால் அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கௌரி லங்கேஷின் மரணம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அவரது கொலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கௌரியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான கூட்டம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செப்.11 நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் மேற்கொண்டது. இதில் கலந்துகொண்ட மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பேசுகையில், கௌரி லங்கேஷ் பத்திரிகையின் விளம்பரம் விற்பனையைச் சார்ந்திருக்காமல் தனது திடமான நம்பிக்கையைச் சார்ந்திருந்தார். அவரது கொலை தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ள போதிலும், பேச்சுரிமை சுதந்திரம் என்பது ஆபத்தான நிலையில் உள்ளது. பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் ’விசில்ப்ளோயர்ஸ்’ மசோதா சட்டம் ஆக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மூத்த பத்திரிகையாளர் ராம் பேசும்போது, இந்தியாவில் 1992ம் ஆண்டு முதல் இன்றுவரை 27 பத்திரிகையாளர்கள் தங்களின் பணியை செய்ததற்காக கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை ஒருவர் கூட இதுதொடர்பாக தண்டிக்கப்படவில்லை. கௌரி லங்கேஷ் கொலையிலும் இதுவரை எந்தத் துப்பும் துலங்கவில்லை. எனவே கௌரியை கொலை செய்தவர்களுக்கு அரசியல் பாதுகாப்பு இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது என்று கூறினார்.

திராவிடக் கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி பேசுகையில், கௌரி லங்கேஷ் அவரது சித்தாந்தத்தின் பயனாகக் கொல்லப்படவில்லை. அவரது எதிர் சித்தாந்தத்தின் காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர். காந்தியைக் கொன்றவர்கள் அவர்களது சித்தாந்தத்தின் காரணமாக 42 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறியதாவது, இந்தக் கொலை, உயிரோடிருக்கும் அனைவருக்கும் எச்சரிக்கை ஆகும். முற்போக்கு சிந்தனையை நிறுத்தும் ஒரு முயற்சி. பிரிட்டிஷ் ஆட்சியின் போது கூட, அவர்களுக்கு எதிராக எழுதிய ஒரு பத்திரிக்கையாளருக்கு சிறைத் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது, கொலை செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon