மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர்!

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர்!

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த ஹலிமா யாகோப் (62) போட்டியின்றி தேர்வாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி சிங்கப்பூரின் அதிபராகப் பதவி வகித்த டோனி டான் பதவிக்காலம் செப்-1 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் தற்காலிக அதிபராக இந்திய வம்சாவளி தமிழரான ஜோசப் யுவராஜ் பிள்ளை(83) நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து சிங்கப்பூரின் அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர்-23 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடப் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று 11 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் மனுவைத் தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்பாளர்கள் மூன்று பேரில் இருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதால். ஹலிமா யாகோப் மட்டுமே போட்டியில் உள்ளார். எனவே ஒரு மனதாக அவரே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் முடிசூட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபராகப் பதவி ஏற்பதன் மூலம் மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றும் வாய்ப்புக் கிடைக்கும் என ஹலிமா யாகோப் தெரிவித்தார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon