மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட்!

பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட்!

பாகிஸ்தானில் 2009ஆம் ஆண்டு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தொடுத்த தாக்குதலையடுத்து, பாதுகாப்பு பிரச்னை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வந்தன. இதனால் பாகிஸ்தானில் விளையாடும் போட்டிகள் பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சொந்த மண்ணில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. ஐ.சி.சி. கொடுத்த ஒத்துழைப்பின் பலனாக உலக லெவன் அணி, பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறது.

உலக லெவன் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் செப்.12(இன்று), செப்.13, செப்.15 ஆகிய தேதிகளில் லாகூரில் நடத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் டூ பிளஸ்சிஸ் தலைமையிலான உலக லெவன் அணி நேற்று அதிகாலை லாகூர் சென்றடைந்தது.

பாகிஸ்தான் அணிக்கு சர்ப்ராஸ் அகமது கேப்டனாக செயல்படுவார். உலக லெவன் அணியில் இந்திய வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம்:

உலக லெவன்: டூ பிளிஸ்சிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கல், ஜார்ஜ் பெய்லி, டிம் பெய்ன், பென் கட்டிங், தமிம் இக்பால், திசரா பெரேரா, கிரான்ட் எலியாட் , பால் காலிங்வுட் , டேரன் சேமி, சாமுவேல் பத்ரீ.

பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), பஹார் ஜமான், அகமது ஷேசாத், பாபர் அசாம், சோயிப் மாலிக், உமர் அமின், இமாத் வாசிம், ஷதப் கான், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ஆமிர் யாமின், ருமான் ரயீஸ், உஸ்மான் கான், சோகைல் கான்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி கூறுகையில், பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய நாள். இது மட்டும் நடக்காவிட்டால் இன்னும் எத்தனை ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக காத்திருக்க வேண்டி இருந்திருக்குமோ என்பது தெரியாது. ரசிகர்கள் சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆர்வமாக உள்ளனர். அதற்கான தொடக்கம் தான் இது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் இங்கு வந்து விளையாட ஒப்புக்கொண்டுள்ளன என்றார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon