மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

லண்டனில் நீட் போராட்டம் !

லண்டனில் நீட் போராட்டம் !

ஜல்லிக்கட்டுக்கு பீட்டா, அனிதாவுக்கு நீட்டா என்று தமிழர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் முழங்கி நீட்டிற்கு எதிராகப் போர் முழக்கத்தை எழுப்பியிருக்கிறார்கள். நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட அனிதாவின் மரணம் உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஈராக், சிங்கப்பூர் என்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் அனிதாவின் மரணத்திற்குத் துக்கம் அனுஷ்டித்து நீட் தேர்விற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான் லண்டனில் வாழும் தமிழர்கள் பறை முழக்கத்தோடு நீட் தேர்விற்கு எதிராக போர் குரல் எழுப்பியிருக்கிறார்கள். நேற்று (செப்டம்பர், 11) லண்டனில் வாழும் தமிழர்கள், மற்றும் இலங்கைத் தமிழர்கள் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு கூடினார்கள்.

மாணவி அனிதாவிற்காக மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மாணவி அனிதாவின் புகைப்படத்தை கையில் ஏந்திப் போராடினர்.

நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். நீட்டை தடை செய்வோம், தமிழகத்தை மீட்போம் என்று முழக்கமிட்டவர்கள் தாரை தப்பட்டையுடன் பறை இசை முழங்கப் போராடினர். அப்போது செய்தியாளர்களிடம் “அனிதாவின் மரணம் சமூக நீதியின் கொலை. இந்திய குடிமக்களுக்கு ஒரே சமமான கல்வி முறையில்லை. ஆனால் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு மட்டும் எப்படி சாத்தியம். இது வரை தமிழகத்தில் இருந்து வந்த எந்த மருத்துவர் சிறந்த மருத்துவ சேவையை அளிக்கவில்லை. 98 சதவீதம் மாநிலப்பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை நீட் பாதிக்கிறது. வெறும் 2 சதவீதம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ பாடத்தைப் படிக்கின்றனர். தமிழக அரசு தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்“ என்று லண்டன் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon