மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

காவிரி மஹா புஷ்கர விழா தொடங்கியது!

காவிரி மஹா புஷ்கர விழா தொடங்கியது!

காவிரி மகாபுஷ்கரம் விழா 144 ஆண்டுகளுக்குப் பின் இன்று (செப் 12) கொடியேற்றத்துடன் துவங்கியது.

காவிரி மகா புஷ்கரம் விழா நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இன்று காலை 6 மணிக்குக் கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள், துறவிகள் ஆகியோர் காவிரி புஷ்கர விழாவைத் தொடங்கிவைத்துப் புனித நீராடினர். அதன் பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் புனித நீராடினர். காவிரியில் போதிய தண்ணீர் இல்லாததால் துலாக்கட்டத்தில் ரூ.2 கோடி செலவில் புதிதாக நீர்த்தேக்கத் தொட்டி கட்டி, அதில் 3 அடி ஆழத்துக்கு நீர் நிரப்பி அதில்தான் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அழுக்கு நீர் வெளியேற்றப்படவும், புதிய நீர் நிரப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை துலா கட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு 12 ராசிகளுக்குரிய நதிகள் கடஸ்தாபனம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. காவிரி நதியின் ராசி துலா ராசியாக இருப்பதாலும், 144 வருடத்திற்கு ஒரு முறை இந்த மஹா புஷ்கரம் வருவதாலும் காவிரி பாயும் எல்லா இடங்களிலும் இந்தப் புஷ்கர விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக மயிலாடுதுறை துலா கட்டக் காவிரியில் மஹா புஷ்கர விழாவாக வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. தர்ப்பணம் போன்ற சடங்குகள், தானங்கள், ஹோமங்கள் செய்வதற்கும் தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் 12 நாள்களிலும், வேத பாராயணம், மகாமுத்ர பாராயணம், சதுர்வேத பாராயணம், மகா ருத்ரஹோமம், திருமுறை பாராயணம், லலிதா விஷ்ணு சகஸ்ர நாம பாராயணங்கள் மற்றும் காவிரியில் ஆரத்தி எடுத்தல், கலை நிகழ்ச்சிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் காவிரி மகா புஷ்கர சிறப்பு தபால் உறை வெளியீடு விழா இன்று மாலை நடைபெறுகிறது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon