மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

பொதுக்குழுவைக் கூட்டும் முதல்வர்!

பொதுக்குழுவைக் கூட்டும் முதல்வர்!

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க மேல்முறையீட்டு மனுவிலும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால், இன்று செப்டம்பர் 12ஆம் தேதி திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் பொதுக்குழுவைக் கூட்டுகிறார் அதிமுகவின் தலைமைக்கழகச் செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி. இது அதிமுகவின் இப்போதைய உள்கட்சி பிரச்னையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ஒன்றிணைந்த அதிமுக அணிகள், இன்று நடத்தவுள்ள பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நேற்றைய தினம் விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், “இதற்கு நீதிமன்றத்தை நாடுவதை விட, தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதே சிறந்தது. பொதுக்குழுவில் கலந்துகொள்ள விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்” என்று கூறி வெற்றிவேல் மனுவை தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

இதையெதிர்த்து வெற்றிவேல் நேற்றே தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, இந்த மனு, ராஜீ ஷக்தேர், அப்துல் குத்தூஸ் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. முதலில் வெற்றிவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமானுஜம், “தினகரனால் கூட்டப்படும் பொதுக்குழுவே அதிமுகவின் பொதுக்குழுவாகக் கருதப்படும், எடப்பாடி தரப்பில் கூட்டப்படும் பொதுக்குழு அதிமுகவின் பொதுக்குழுவாகக் கருதப்படாது. மேலும் பொதுக்குழுவுக்கு யார் அழைப்பு விடுத்தது என்ற பெயரும் இல்லை” என்று வாதிட்டார்.

அதற்கு முதல்வர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரிமா சுந்தரம், “அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து நடத்தும் பொதுக்குழுதான் இது. அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினராகவே இல்லாத தினகரனுக்குப் பொதுக்குழுவைக் கூட்ட எந்த அதிகாரமும் இல்லை. நாங்கள் பொதுக்குழுவைக் கூட்டுவது தவறு என்றால் தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தையே அணுகியிருக்க வேண்டும்” என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்தபிறகு இரவு 7.15 மணியளவுக்கு நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர், ஆனால் தீர்ப்பு கூற மணி 9.15 ஆகிவிட்டது. நீதிபதிகளின் தீர்ப்பில், ஒருங்கிணைந்த அதிமுக அணிகள் நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குட்பட்டது என்று தெரிவித்து வழக்கை அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதாவது இன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவில் சசிகலா, தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், பொதுக்குழு செல்லாது என்று நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்தால் தீர்மானங்களும் செல்லாது என்று ஆகிவிடும்.

முன்னதாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள், நேற்று மதியம் வந்த தீர்ப்பை பார்த்துவிட்டு உடனே சென்னை கிளம்பி வர ஆரம்பித்தனர். மேல்முறையீடு என்ற செய்திகள் வந்தவுடன் ஒருவேளை பொதுக்குழுவுக்குத் தடை விதித்துவிட்டால் இவ்வளவு தூரம் வந்தது வீணாகிவிடுமோ என்ற அச்சம்கொண்டனர். ஆனால், இரவு வந்த தீர்ப்பினால் அவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இவ்வளவும் நடந்துகொண்டிருக்க, சத்தமே இல்லாமல் தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி, அதிமுகவின் பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று பெங்களூரு உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இடைக்காலத் தடை உத்தரவு வாங்கி விட்டார். தமிழகத்தில் நடைபெறும் பொதுக்குழுவுக்குக் கர்நாடகத்தில் எப்படி தடை வாங்கலாம் என்று கேட்டால், புகழேந்தி தரப்பினர், “அஇஅதிமுக என்பது மாநில கட்சி அல்ல, அது தேசிய கட்சி. பல மாநிலங்களிலும் அதிமுகவுக்குக் கிளைகள் உள்ளன. பொதுக்குழு உறுப்பினர்களும் உள்ளனர். எனவேதான் பொதுக்குழுவுக்கு பெங்களூருவில் தடை வாங்கப்பட்டது” என்று கூறுகின்றனர்.

ஆனால், பெங்களூரு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்குப் பொருந்தாது என்று மறுக்கின்றனர் சட்ட வல்லுநர்கள், அதாவது லோக்சபா தேர்தலில் 37 இடங்களைப் பெற்றிருந்தாலும் அதிமுக என்பது ஒரு மாநிலக் கட்சியே. ஏனெனில், தேசிய கட்சிகளுக்கென்று சில வரைமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

1. ஒரு தேசிய கட்சி என்பது ஒட்டுமொத்தமான மக்களவை உறுப்பினர்களில் 2 சதவிகித இடங்களை (2014 நாடாளுமன்றத் தேர்தல்படி 11 உறுப்பினர்கள்) மூன்று வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பெற்றிருக்க வேண்டும்.

2. சட்டசபைத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ 6 சதவிகித வாக்குகளை நான்கு மாநிலங்களிலிருந்து பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூடுதலாக நான்கு மக்களவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

3. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மாநில கட்சி என்று அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதுதான் அந்த வரைமுறைகள். ஆனால், இதில் ஒன்றுகூட அதிமுகவுக்குப் பொருந்தவில்லை. மேலும் அதிமுக தமிழகம், புதுச்சேரியில் மட்டுமே பெரிய கட்சியாக உள்ளது.

மேலும், 2016ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேசிய கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட ஏழு கட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆனால், அதிமுக மாநிலக் கட்சிகள் பட்டியலில்தான் இடம்பெற்றுள்ளது. எனவே, இன்று நடைபெறவுள்ள ஒன்றிணைந்த அதிமுகவின் பொதுக்குழுவுக்கு பெங்களூரு நீதிமன்றம் விதித்த தடை செல்லுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.

பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கவில்லை என்றாலும், பொதுக்குழுவின் முடிவுகள் இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் கட்சி தன்னிடம்தான் உள்ளது என்பதை நிரூபிக்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பு இது என்று உற்சாகப்படுகிறார் முதல்வர்.

இன்றைய பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவது என்று நேற்றிரவு துணை முதல்வர் ஓ.பன்னீர், அமைச்சர்களுடன் நெடுநேரம் ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

இந்த நிலையில், தினகரன் - எடப்பாடி மோதல் ஒரு முடிவுக்கு வரும் சூழல் வந்துவிட்டதால், இனி தினகரன் அடித்து ஆடுவார் என்கிறார்கள் அவரது தரப்பில். இன்றைய பொதுக்குழுத் தீர்மானங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் இறுதித்தீர்ப்புக்குட்பட்டது என்பதால், எடப்பாடி அணியினருக்கு 100 சதவிகித கொண்டாட்டம் இல்லை என்றாலும், இது தினகரனுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon