மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!

இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!

‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற முயற்சிக்கிறோம். இல்லையேல் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்’ என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழுக் கூடுவதற்கு தடை இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மதுரையில் நேற்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற முயற்சிக்கிறோம். இல்லையேல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டோம். துரோகிகளின் கீழ் ஆட்சி இருக்கக் கூடாது. இந்த ஆட்சி நீடிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல. தமிழக நலன் கருதி இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டோம். இந்த துரோக ஆட்சி தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. பொதுமக்களை ஏமாற்றி ஆட்சியைத் தொடர்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பொய்களைச் சொல்கிறார். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்களே கருதுகின்றனர். பதவி இல்லையேல் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தூக்கம் வராது. இந்த ஆட்சியைக் கிள்ளி எறிவோம். இன்னும் 10 நாள்களில் மாற்றம் வரும். துரோகம், சுயநலச் சிந்தனை உள்ளவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்ய முடியும். 90 சதவிகிதத் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். விரைவில் அதிமுகவை மீட்டெடுப்போம்” என்று கூறினார்.

அணிகள் இணைந்த பிறகு, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், இதுவரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று மட்டுமே கூறிவந்தார். தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வைத்தபோதும், முதல்வரை மாற்ற வேண்டும் என்பதாகவே இருந்தது. இதை காரணமாக காட்டித்தான் ஆளுநரும் இது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை என்று கூறி எடப்பாடியை பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடாமல் இருந்து வந்தார்.

தினகரனும் அதிமுகவின் பொதுக்குழு தன் பக்கம்தான் இருக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தார். தற்போது அந்த நம்பிக்கையும் நழுவிவிட்டது என்று தெரிகிறது. அதனால்தான், பொதுக்குழுக் கூட்டுவதற்கு எதிராக தனது ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் பொதுக்குழுக் கூடுவதற்குத் தடை இல்லை என்று கூறிவிட்டது. அதுமட்டுமில்லாமல், பொதுக்குழுவை மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பலத்துடன் கூட்டலாம் என்பதாலும் அதிமுகவின் பொதுக்குழு இன்று கூடுகிறது. இந்த பொதுக்குழுவில் தினகரன், சசிகலா இருவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, அதிமுக முழுவதுமாக தினகரனின் கையைவிட்டுப் போய்விடும். அதனால், தினகரன் இதுவரை தனது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலத்துடன் முதலமைச்சர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கூறிவந்தவர். முதன்முறையாக நேற்று இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற இறுதி அஸ்திரத்தை பிரயோகிக்க முன்வந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் அசாதாரண அரசியல் சூழல் க்ளைமாக்ஸை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon