மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஜோதிகா குற்றச்சாட்டு: சூர்யா பதில்!

ஜோதிகா குற்றச்சாட்டு: சூர்யா பதில்!

“தற்போது பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண் எழுத்தாளர்கள் யாரும் அறியாத ஹீரோஸ். அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்” என்று நடிகை ஜோதிகா சில தினங்களுக்கு முன்பு ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்துக்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியிருந்தார். இதை எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தின் பணிகள் நிறைவடைவதில் தாமதமாவதால் அதற்கு முன்பாக இயக்குநர் சுதா படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் சூர்யா. அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதற்கு முன்பாகவே படம் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர். சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார்.

சுதா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon