மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

நீட்: மருத்துவப் படிப்பில் வெளிநாட்டு மாணவர்கள்!

நீட்: மருத்துவப் படிப்பில் வெளிநாட்டு மாணவர்கள்!

‘நீட் என்னும் போர்வையில் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கதவு திறந்து விடப்பட்டுள்ளது. நீட்டினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லுவது பச்சையான பொய்; உண்மை நிலவரம் என்ன என்பதைப் புள்ளிவிவரம் சொல்கிறது’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுக்கவும் போராட்டங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தின் இன்னொரு கோணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் கி.வீரமணி.

“தமிழ்நாட்டில் நீட் என்ற பெயரில் சமூகநீதியை வெட்டி வீழ்த்தி, முன்னேறிய பார்ப்பனரும், ஏனையோரும் - முன்பு போலவே, கல்வியை தமது ஏகபோக ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரக் கூடிய ஆயுதத்தை மருத்துவக் கல்வியிலிருந்து தொடங்கியுள்ளனர், மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆளும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஆட்சியின்மூலம்.

நீட் தேர்வின் மறுபக்கத்தில் வெளிநாட்டு மாணவர்களை நம் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கவைக்கும் திட்டம் இருக்கிறது. பாஜகவினரும் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட நம் இனத்து விபீடணர்களும் மட்டும்தான் நீட் என்ற அகில உலக நுழைவுத்தேர்வினை சிலாகித்துப் பேசி வருகின்றனர்.

இதைப் பெரும் சூழ்ச்சித் திட்டமாக First Global Medical Entrance Test என்ற பெயரால் சட்டத்தினை வளைத்துள்ளார்கள் என்பது நமது தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் பலரும்கூட அறிந்திராத உண்மையாகும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குக் கதவு திறக்கக் கூடாது என்ற எதிர்ப்புக்கு மறுப்பு அளிக்க முடியாத நிலையில், உலகமயமாக்கி, தாராளமயமாக்கி, இறுதியில் தனியார்மயமாக்கும் திட்டத்தினை கொல்லைப்புற வழியில் செய்துள்ளனர்.

வெளிநாட்டவர்களுக்கு நம் வரிப் பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை நோகாமல் அவர்களுக்குத் தாரை வார்க்கும் உலக வர்த்தகத் திட்டமும் இதில் அடங்கியுள்ளது. கல்வியை வணிகமயமாக்கும் திட்டத்தின் முதல்கட்டம் இது” என்று தெரிவித்துள்ளார் கி.வீரமணி.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon