மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஜிமிக்கி கம்மல்: தமிழ்நாட்டுக்குக் கிடைத்த ‘இலவச’ப் பெருமை!

ஜிமிக்கி கம்மல்: தமிழ்நாட்டுக்குக் கிடைத்த ‘இலவச’ப் பெருமை!

சிவா

ஜிமிக்கி கம்மல் பாடலையும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியையும் ஹாலிவுட் லெவலுக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

அமெரிக்க டிவி தொகுப்பாளர் ஜிம்மி கெம்மலை, ஜிமிக்கி கம்மல் வீடியோவில் டேக் செய்து இதைப் பார்த்தீர்களா? உங்கள் பெயரைப் போலவே உச்சரிப்பு இருக்கிறது எனச் சொல்ல, அந்த வீடியோவைப் பார்த்தவர் இதுவரை இல்லை. இப்போது பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது என ஒரு கமெண்ட் டைப் செய்ததால், ஜிம்மி கெம்மல் பார்த்த ஜிமிக்கி கம்மல் என்று அடுத்தகட்ட பரப்புரை தொடங்கிவிட்டது.

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆடி வெளியிட்ட வீடியோ உண்மையிலேயே வெற்றியா என்பதைப் பார்த்தால் கிட்டத்தட்ட வெற்றிதான். Velipadinte Pusthakam திரைப்படம் கேரளாவில் ரிலீஸானபோது, சமீபத்திய ட்ரெண்டிங்கில் கலந்துகொள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்யுங்கள் என்று படக்குழு கேட்டிருந்தது. அதற்காக உருவாக்கப்பட்ட வீடியோதான் இத்தனைப் பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் கிடைக்கும் பாராட்டு அல்லது பரிசைவிட மிகப்பெரிய அளவுக்கு சென்றுவிட்டனர் அதை உருவாக்கியவர்கள். அந்த வீடியோவில் ஆடியதைவிட வேறெதுவும் செய்யாத ஷெரில் சினிமாவில் நடிக்க விரும்புவதாக வெளியிட்டிருக்கும் பேட்டியில் கூறிவிட்டதால் அதன் பரிசைவிட பெரிய பரிசு கிடைத்துவிட்டது உறுதியாகிவிட்டது. மேலே குறிப்பிட்டுள்ள, குறிப்பிடப்படாத அனைத்துப் பாராட்டுகளுக்கும் சொல்லப்படும் ஒரே காரணம் தமிழர்கள் அல்லது தமிழ்நாடு.

ஏற்கெனவே தேசிய ஊடகங்கள் முதல் அனைத்து மாநில ஊடகங்களிலும் தற்போது தமிழ்நாட்டுக்கென ஒரு ஸ்லாட் ஒதுக்கப்பட்டுவிட்டது. நீட் பிரச்னை, ஆளும்கட்சியின் நிலையற்ற தன்மை, நவோதயா பள்ளிகளைத் தொடங்கச் சொன்ன நீதிமன்றத் தீர்ப்பு என நாளுக்கொரு பரிமாணத்தில் அவை இடம்பெற்றிருந்தபோது, ஷெரிலின் ஜிமிக்கி கம்மல் வீடியோவுக்குக் கிடைத்த வரவேற்பு மூலமாகவும் தமிழ்நாடு என்ற வார்த்தை அந்த ஊடகங்களில் ஒளிபரப்பாகிவிட்டது. ஆனால், தமிழ்நாட்டின் நிலைமையே வேறாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் மாணவர்களில் பெரும்பாலானோர் தங்களது அடிப்படை உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில், அதில் நாட்டமில்லாதவர்களின் முக்கிய பொழுதுபோக்காக ஜிமிக்கி கம்மல் வீடியோ மாறிப்போனது. அப்படி ஜிமிக்கி கம்மல் வீடியோவைப் பார்த்தவர்களிலும்கூட அனைவருமே அதை விரும்பினார்களா என்றால், இல்லை. இந்த வீடியோவையும்விட பல டான்ஸ் வீடியோக்கள் யூடியூபில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும், இந்த வீடியோ இத்தனைப் பெரிய ஹிட் அடித்ததற்குக் காரணம், டைம்ஸ் ஆஃப் இந்தியா முதற்கொண்டு பல தேசிய ஊடகத்திலும், இணையதள ஊடகங்களிலும் அதை ‘வைரல் வீடியோ’ என்று செய்தி வெளியிட்டதுதான் எனும்போது தமிழ்நாடு மற்றும் தமிழர்களைக் கைகாட்டுவது எந்தவிதத்தில் சரியானது என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடலாம்.

ஜிமிக்கி கம்மல் வீடியோவுக்குத் தமிழகத்தில் கிடைத்ததாகச் சொல்லப்படும் வரவேற்பைப் பார்க்கும்போது, தமிழ் சினிமாவில் கேரளப் பெண்களை தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற லாஜிக் உள்ளதுதான் நினைவுக்கு வருகிறது. சேலை கட்டினாலும், மாடர்ன் உடையில் இருந்தாலும் பெண்கள் அழகுதான். சொல்லப்போனால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகென நாம் எதை நினைக்கிறோமோ அதுதான் அழகு. வெள்ளையாக இருக்கிறவர்களையெல்லாம் ஹீரோக்களாகவும், கறுப்பாக இருப்பவர்களையெல்லாம் கூலிக்காரர்களாகவும் சித்திரித்த சினிமா கறுப்பிலும் ஓர் அழகுண்டு என உணர்ந்த பின்னரே ரஜினியை ஜெயிக்க வைத்தது. அதன் பிறகுதான் தொடர்ந்து விஜயகாந்த், பார்த்திபன், விஜய் என மாநிற ஹீரோக்கள் வந்தார்கள். வென்றார்கள்.

அதுபோலத்தான் இந்த வீடியோவையும் அணுக வேண்டும். அடிப்படையில், ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செல்ஃபி புள்ள’ பாடலைப்போலவே ஜிமிக்கி கம்மல் பாடல் தொடங்குவதால் சட்டென ‘இனம் புரியாத’ ஈர்ப்பு அதன்மேல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், என் அம்மாவின் ஜிமிக்கியை அடகுவைத்து என் அப்பா சரக்கு வாங்கினார். அந்த சரக்கை என் அம்மா எடுத்து குடித்துவிட்டார் என்று பொருள் பேசும் பாடலெனத் தெரிந்ததும் அதன்மீது ஏற்பட்ட அந்நியம் அதன் தரத்தை ஆராய்ந்ததுதான் உண்மை. தமிழகத்தின் திருவிழாக்களில் பெண்கள் ஆடிய ஆட்டங்களில் பல அதே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. தொண்ணூறு லட்சத்தை எட்டியிருக்கும் ஜிமிக்கி கம்மல் வீடியோவைவிட, 7 லட்சம் பார்வையாளர்களை மட்டுமே பெற்று சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த இரு பெண்களின் குத்து நடனத்தின் வெற்றிக்குக் காரணம் தமிழ்நாடு அல்லது தமிழர்கள் காரணம் என்று சொன்னால் அது கொஞ்சம் நம்பும்படியாக இருக்கும். ஏனென்றால், அந்த வீடியோ பொதுத்தளமாக இருந்தாலும் தமிழ்நாட்டைத் தாண்டிச் செல்லவில்லை.

சினிமாவுக்கான கோட்பாடுகளைத் தாண்டி ரியாலிட்டியை மக்கள் அதிகம் விரும்புவதே ஜிமிக்கி கம்மல் வீடியோக்கள் பெறும் வெற்றியின் அடிப்படைக் காரணம். Velipadinte Pusthakam திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரிஜினல் பாடலுக்குக்கூட, ஷெரில் & குழுவினர் ஆடிய ஆட்டத்துக்குக் கிடைத்த வெற்றி கிடைக்கவில்லை. ஏனென்றால், சினிமாவில் எல்லாம் சிறப்பாக திட்டமிடப்பட்ட ஒரு ராணுவ அணிவகுப்பு போல் இருக்கும். ஆனால், இந்த வீடியோக்களில் மேக்-அப் இல்லாமல், கை கால்களை வந்த வேகத்துக்கு வீசிக்கொண்டு ஆடும் ஆட்டம், அதைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்களையே முன்நிறுத்துவது போலத் தோன்றும். இந்த சாராம்சம் இவற்றின் வெற்றி மட்டுமல்ல. தொலைக்காட்சிகளில் ஹிட் அடிக்கும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் வெற்றியும் இதன் அடிப்படைதான். இன்று பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிக்கு பேராதரவு தரும் ரசிகர்கள் ஒரு காலத்தில், முழுவதும் மேக்-அப் போட்டுக்கொண்டு வந்தவர்களைப் பாராட்டியவர்கள். ஏன், அஜித் அவரது இயற்கையான வெள்ளை முடியுடன் வரும்போதும் ஏற்றுக்கொண்டவர்கள் தானே தமிழ் ரசிகர்கள்.

இப்படி மாறியிருக்கும் நிலைதான் இன்று ஜிமிக்கி கம்மல் வீடியோக்களையும் ஆதரவளிக்கத் தூண்டியிருக்கிறது. ஜிமிக்கி கம்மல் ரசிகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால், 85 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது கொஞ்சம் தொண்டையைக் கவ்வுகிறது. நூறு நூறு பேராக மாநிலம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கிறோம் சார். அனைவரையும் கண்டுபிடித்தால் அனுப்பி வையுங்கள். இதுதான் அடுத்ததாகப் பேசவந்தது.

ஊடகங்களில் இப்படிப் பெரிதுபடுத்தப்பட்ட ஜிமிக்கி கம்மல் வீடியோவின் மூலமாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மற்றும் ப்ளூவேல் சேலஞ்ச் விழிப்புணர்வு ஆகிய இரண்டின் மீதும் மக்களுக்கிருந்த ஆர்வம் தேக்கமடைந்திருப்பது உண்மை. இதன் வெளிப்பாடாக ‘எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தபோது இதெல்லாம் தேவையா?’ என்ற கேள்விகளும் எழுந்தன.

அந்தப் பதிவுகளையெல்லாம் ‘நீ ரசத்த ஊத்து’ என்பதுபோல விலக்கிவிட்டுச் சென்றதால் உருவானவை ‘ஷெரில் ஃபேக் ஐடிக்கள்’. ஒரு காலத்தில் ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்’, ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’, ‘அச்சச்சோ இப்படி ஆகிடுச்சே’ என சிலவற்றை பகிர உதவிய ஃபேக் ஐடிக்களின் இன்றைய நிலை. என்னுடைய ஜிமிக்கி கம்மல் வீடியோவுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. ஆனால், உங்கள் ஊரிலுள்ள அனிதா விஷயத்தையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று சொல்வதற்குப் பயன்பட்டுவிட்டதுதான் காலத்தின் கொடுமை. இப்படிப்பட்ட ஒரு ஸ்டேட்மெண்ட் சோஷியல் மீடியாக்களில் உலா வரத் தொடங்கியதும் என் பெயரில் பல ஃபேக் ஐடிக்கள் வந்துவிட்டன. அவர்களுக்கு லைக் - கமெண்ட் செய்து ஆதரவளிக்காதீர்கள் என்று ஒரிஜினல் ஷெரில் ஒரு போஸ்ட் அப்டேட் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டது. அந்தப் போஸ்ட்டில் ஓகே சொன்ன பலருக்கும் அவரது டிஸ்பிளேவில் வைத்திருந்த போட்டோவுக்கு ஃபேஸ்புக்கின் சமீப அறிமுகமான ‘செக்யூரிடி கார்டு’(Security Guard) மூலம் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார் என்பது தெரியாது. காரணம், ஜிமிக்கி வீடியோவைப் பற்றி வெளியிட்ட செய்தியில் சொல்லியிருந்தபடி ஷெரிலின் போட்டோவை எடுத்து தாறுமாறாக சோஷியல் மீடியாக்களில் உலவவிட்டது தான்.

ஜிமிக்கி கம்மல் பாடலுக்குக் கிட்டத்தட்ட நூறு வீடியோக்கள் கேரள டீன் ஏஜ்களால் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஷெரில் & குழுவினர் வீடியோவுக்குப் பார்வையாளர்கள் கிடைத்திருப்பது கஷ்டம் என்ற நிலைதான் ஆரம்பத்தில் இருந்தது. தேசிய ஊடகங்களின் வெளிச்சத்துக்குப் பிறகுதான் அந்த வீடியோ சிறப்பானதாக மாறியதே தவிர, தமிழர்களுக்கும் இதற்குமான சம்பந்தம் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ஆனால், மீடியாக்களின் பேச்சைக் கேட்டு தமிழ்நாட்டுக்கு நன்றி சொல்லி ஷெரில் பதிவு செய்த போஸ்ட்டுகளில் மீம்ஸ், வடிவேலு, கேப்டன், டுரோல் வீடியோ ஆகியவற்றை கமெண்டு செய்து கொடுத்த தொல்லையில் தனது பேஜில் யாராக இருந்தாலும் கமெண்டு செய்யும்படி இருந்த செட்டிங்க்ஸை மாற்றிவிட்டார் ஷெரில். ஆலகால விஷத்தை தொண்டையிலேயே பிடித்து நிறுத்தியதைப் போல ஜிமிக்கி கம்மலின் புகழையும் தற்போது நசுக்கிவிட்டார்கள். நேற்று இரவு நேரம் 11.00இன்படி ஷெரிலின் ஒரிஜினல் ஃபேஸ்புக் ஐடி டீஆக்டிவேட்டட். இதற்கும் தமிழ்நாட்டை கைகாட்டாமல் இருந்தால் சரி.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon