மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

கால்பந்து உலகக்கோப்பை: தயாராகிறது இந்தியா!

கால்பந்து உலகக்கோப்பை: தயாராகிறது இந்தியா!

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைமையான FIFA நடத்தும் 17ஆவது 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. 24 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டி இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி அட்டவணைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கோவா, கொச்சி, கவுஹாத்தி, கொல்கத்தா போன்ற ஆறு நகரங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, யூஎஸ்ஏ, கொலம்பியா, கானா; குரூப் பி பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி; குரூப் சி பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டா ரிக்கா; குரூப் டி பிரிவில் கொரியா, நைஜிரியா, பிரேசில், ஸ்பெயின்; குரூப் ஈ பிரிவில் ஹோண்டுரஸ், ஜப்பான், நியூ செலிடோனியா, பிரான்ஸ்; குரூப் எஃப் பிரிவில் ஈராக், மெக்ஸிகோ, சிலி, இங்கிலாந்து போன்ற அணிகள் பங்கேற்கின்றன.

ஓர் அணி தனது குரூப்பிலுள்ள இதர மூன்று அணிகளுடன் மோதிய பின்னர், ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.

முதல் போட்டி டெல்லியில் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்குகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா - யூஎஸ்ஏ, கொலம்பியா - கானா அணிகளும், குரூப் பி பிரிவில் பராகுவே - மாலி, நியூசிலாந்து - துருக்கி அணிகளும் பல பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணியின் போட்டி அட்டவணை:

அக்டோபர் 6, 2017. இந்தியா vs யூஎஸ்ஏ (ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், டெல்லி)

அக்டோபர் 9, 2017. இந்தியா vs கொலம்பியா (ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், டெல்லி)

அக்டோபர் 12, 2017. இந்தியா vs கானா (ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், டெல்லி)

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon