மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

எச்.ராஜாவுக்கு மூவரணி எதிர்ப்பு!

எச்.ராஜாவுக்கு மூவரணி எதிர்ப்பு!

பாஜக தலைவர் எச்.ராஜாவைச் சாரணியர் அமைப்புக்குத் தலைவராக்க முயற்சி நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் வசைபாடி வருகிறார். அதனால், எச்.ராஜா மீது எதிர்க்கட்சிகள். அரசியல் இயக்கங்கள். அமைப்புகள் அதிருப்தியில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு சாரணர் - சாரணியர் இயக்கத்துக்கு எச்.ராஜாவைத் தலைவராக்க அதிமுக அரசு முயற்சி செய்வதாக செய்தி வெளியானது. அதிமுகவின் இந்த முயற்சிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், எச்.ராஜா சாரணர் இயக்கத்துக்கு தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகிய மூவரணி நேற்று (செப்டம்பர் 11) கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அந்தக் கூட்டறிக்கையில், “தமிழகத்தில் பள்ளி மாணவ - மாணவிகளிடையே செயல்பட்டுவரும் சாரண - சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருபவருமான எச்.ராஜாவைத் தலைவராக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக கல்வித்துறை அதிகாரிகள் மறைமுகமாக மிரட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

தமிழகம் சமூக நல்லிணக்கம், சமூக நீதி ஆகியவற்றின் தாயகமாக திகழ்ந்து வருகிறது. அதுவும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்தியில் சமத்துவ - சகோதரத்துவ எண்ணங்கள் அதிகமாக மேலோங்கியிருக்கும் மாநிலமாகவும் திகழ்கிறது.

அப்படிப்பட்ட நல்லிணக்க உணர்வுகள் நிறைந்திருக்கும் தமிழகத்தில், சாரண - சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிவரும் எச்.ராஜாவைத் தலைவராக்க தமிழக அரசு முயற்சி செய்வது அதிர்ச்சியளிக்கிறது.

பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் நாசகார செயலில் ஈடுபடுவது கடும் வேதனையளிக்கிறது. இதை ஏற்கவே முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற பொறுப்புகளுக்குச் சகிப்புத்தன்மையும், பன்முக கலாசாரத்தை ஊக்குவிக்கும் பரந்த மனமும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட பொதுவான ஒரு நபரையே கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இப்பொறுப்புக்கு எச்.ராஜாவை கொண்டுவரும் முயற்சியைக் கைவிட்டு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் முடிவுகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று மூவரணி கூறியுள்ளனர்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon